ADVERTISEMENT

மீண்டும் அரங்கேறிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சம்பவம்!

01:50 PM Apr 01, 2024 | ArunPrakash

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள மலை பிரதேச பகுதிகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதி அதிக குளிராக இருப்பதால், கோடை காலத்தில் அதிகமான நபர்கள் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளான, கேரளாவைச் சேர்ந்த சில இளைஞர்கள், ஆபத்து நிறைந்த குணா குகைக்கு தடையை மீறி செல்கின்றனர்.

ADVERTISEMENT

அப்போது, அங்குள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விடும் ஒருவரை, அவரின் சக நண்பர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவதுதான் கதை. இந்தப் படம் வெளியானது முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் வெளியானதில் இருந்து, கொடைக்கானலுக்கும் குணா குகைக்கும் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள் கிடைத்த விடுமுறை தினத்தில் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல நண்பர்கள் குழு ஒன்று திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, 22 வயதான தனராஜ் மற்றும் அவரின் நண்பர்கள் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள், வழக்கமாக சுற்றுலா செல்லும் இளைஞர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அது அனைத்தையும் செய்து மகிழ்ந்துள்ளனர். அப்போது அவரவர் புகைப்படங்களை வித விதமாக எடுத்து மகிழ்ந்துள்ளனர். பின்னர், கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதிக்குச் சென்ற நண்பர்கள், அங்கிருந்து நடந்து சென்று டால்பின் நோஸ் சுற்றுலாப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்தப் பகுதி கொடைக்கானலில் உள்ள ஆபத்தான இடங்களுள் இதுவும் ஒன்று. டால்பின் மீனின் மூக்குப்பகுதி போன்று இந்தப் பாறை அமைந்துள்ளதால் இந்த இடம் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது. ஆனால் இங்குள்ள ஆபத்தை உணராத தனராஜ் செல்ஃபி எடுக்கும் நோக்கத்துடன், டால்பின் நோஸ் பாறை பகுதியின் முனைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரின் கால் சட்டென்று வழுக்கியுள்ளது. உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மேலே இருந்து அலறியபடி பொத்தென்று சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார் தனராஜ். இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவரின் நண்பர்கள், அந்த ஆபத்தான இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

கை கால்களில் பலத்த காயங்களுடன் தனராஜ் கீழிருந்து கதறியுள்ளார்.உடனே அவரின் நண்பர்கள் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர், வனத்துறையினர் என அனைவரும் உடனடியாக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கயிறு கட்டி 100 அடி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் தனராஜை உயிருடன் மீட்டுள்ளனர். கீழே விழுந்த தனராஜிக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக படுகாயமடைந்த தனராஜை உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும் போது, கொடைக்கானல் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய பகுதி மட்டுமில்லை. இது ஆபத்து நிறைந்த பகுதியுமாகவும் இருக்கிறது. அழகும் ஆபத்தும் உள்ளதை, சிலர் அறியாது ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல ஆசைப்படுகின்றனர். வனத்துறை சார்பாக ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட போதிலும், சிலர், எச்சரிக்கையையும் மீறி செல்வதால் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆபத்தை உணர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT