ADVERTISEMENT

ஜெயிச்சது நீங்கதான்... ஆனா செல்லாது... கரூர் கலாட்டா!

09:42 AM Feb 11, 2020 | kalaimohan

நீங்க தான் ஜெயிச்சிங்க , நாங்க தான் வெற்றி சான்றிதழ் கொடுத்தோம். ஆனா இப்ப செல்லாது என தேர்தல் அதிகாரி சொன்னதால் பதவியிழந்துள்ளார் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஒருவர்.

இந்த விசித்திர வில்லங்கமான சம்பவம் கரூர் கிருஷ்ணராயபுரம் சித்தலவாய் ஊராட்சியில் நடைபெற்றுள்ளது. திருச்சியில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணராயபுரம் பேங்கில் சாலை மதுக்கரையில் வசித்து வருகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தப் பகுதியில் பொதுமக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும், சமூக ஆர்வலராக இருந்து வருவதால் நடைபெறும் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் பங்குபெற்று பேச வேண்டும் என்பதற்காக திருச்சியில் இருந்த ஓட்டை இந்தப் பகுதிக்கு மாற்றி கொண்டார்.

கிராம பஞ்சாயத்தில் மக்கள் திட்டங்களுக்காக செலவிடப்படும் செலவுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்று பஞ்சாயத்து ஊழலுக்கு எதிராக போராடி வந்தார்.

ஒரு கட்டத்தில் ஊழல் அரசியல்வாதிகளை விரட்ட நாமே தேர்தலில் நின்றால் என்ன முடிவு செய்துதான் கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சித்தலவாய் ஆறாவது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு மொத்தம் 270 ஓட்டுகளில் 240 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்ற பிறகு துணைத் தேர்தலில் மொத்தம் இருந்த ஒன்பது உறுப்பினர்களில் ஆறு பேர் வாக்களித்து துணைத் தலைவராகவும் தேர்வு தேர்வு செய்யப்பட்டார் . இந்தநிலையில்தான் இந்த தேர்தல் செல்லாது என அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்திருப்பது கிருஷ்ணமூர்த்திக்கு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் பொது பிரச்சனைக்காக தொடர்ந்து போராடியதன் விளைவே இந்தத் தேர்தலில் நான் போட்டியிட்டேன். தேர்தலுக்கு எனக்கு 450 ரூபாய் தான் செலவானது.

ஓட்டு எண்ணும் போது தோளில் நான் போட்டிருந்த துண்டை கழற்றி விட்டுத்தான் உள்ளே வரவேண்டும் என்று சொன்னார்கள். அதற்காகவே ஓட்டு எண்ணிக்கைக்கு கூட போகவில்லை.

இட ஒதுக்கீடு வந்தவுடன் அரசாணையின்படி எனது ஆறாவது வார்டில் பொது பெண்களிடம் வேட்புமனு வாங்காமல் ஆண்களிடம் வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டனர். வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் போது, இறுதி பட்டியல் தயாரிக்கும்போது, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும்போது, தேர்தலின்போது, தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்பு கூட இந்த வார்டு பெண்களுக்கான வார்டு என அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது எப்படி?

என்னை உறுப்பினர் மற்றும் துணை தலைவர் பதவியிலிருந்து நீக்கும் முன்பாக எனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம் .

மாவட்ட தேர்தல் அதிகாரி எந்த விளக்கமும் கேட்காமல் நேரடியாக நானே குற்றவாளி என்பது போல் என்னை நீக்கியுள்ளார். அதிகாரிகளின் அலட்சியமும் அவர்களின் தவறை மறைப்பதற்காக செய்யும் நடவடிக்கை இது.

இந்தப் பிரச்சனையில் ஒதுக்கீட்டை சரியாகப் பார்க்காமல் எங்களுக்கு தெரிவிக்காமல் எங்கள் மனுவை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள்தான் குற்றவாளிகள். அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து நீதிமன்றம் வரை சென்று நியாயத்தை நிலைநாட்டுவேன் என்றார்.

கரூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அடாவடியாக நேர்மையற்ற முறையில் பல இடங்களில் பாரபட்சமாக நடந்து கொண்டனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். தற்பொழுது அது உண்மைதானோ என்பதைப் போல உள்ளது இந்த தேர்தல் நடவடிக்கை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT