ADVERTISEMENT

‘கட்டணமின்றி பயணம் செய்யலாம்’ -  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

08:19 AM Jan 05, 2024 | prabukumar@nak…

சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ மற்றும் 10 கி.மீ) ‘சென்னை மாரத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் நாளை (06.01.2024) காலை 04.00 மணி முதல் நடைபெறுகிறது. இந்த மாரத்தான் ஓட்டம் சென்னை நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே. சாலை, இ.சி.ஆர் வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (06.01.2024) அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும் எனச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் சேவைகள், நாளை (06.01.2024) அதிகாலை 03.00 மணி முதல் 05.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

ADVERTISEMENT

மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சிறப்பு கியூஆர் (QR) குறியீடு பதியப்பட்ட பயண அட்டையைப் பயன்படுத்தி நாளை (06.01.2024) ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம். இந்த கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம். வழக்கமான மெட்ரோ இரயில் சேவைகள் காலை 05.00 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT