ADVERTISEMENT

"திருமாவும், நாங்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துள்ளோம்"- கே.பாலகிருஷ்ணன் பேச்சு!

07:08 PM Oct 21, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பிறந்த நாள் விழா, 'சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை' என்ற பெயரில் இசை அரங்கம், வாழ்த்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் பால.அறவாழி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பேசுகையில், "இங்கு பேசிய வேல்முருகனின் பேச்சை பல இடங்களில் கேட்டுள்ளேன். அவர் அரசியல் வாழ்க்கை தொடங்கி பல கட்டங்களாகப் படிப்படியாக முன்னேறி தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார். அவருக்குள்ளே ஏற்பட்டுள்ள பரிமாண வளர்ச்சியைக் கண்டு உண்மையாகவே பெருமைப்படுகிறேன்.

ஏனென்று சொன்னால், எந்த இரண்டு சமுதாயங்கள் மற்றும் சமூகங்களும் ஒன்றிணையக் கூடாது என்ற இயக்கத்தில் பிறப்பெடுத்து, அந்த இரண்டு சமுதாயங்களும் இணைய வேண்டுமென இரண்டு கைகோர்த்து சகோதரர்களாகப் பணியாற்ற வேண்டும் எனப் பேசுகிற அளவிற்கு, அவர் உயர்ந்திருக்கிறார்கள் என்றால் அப்படிப்பட்ட மாற்றங்கள் வேறு சிலருக்கு இல்லையே என்பதுதான் நமக்கு வருத்தமாக இருக்கிறது.

இங்கு சகோதரர் திருமாவளவன் வேறு நாங்கள் வேறு என்று இருந்தால் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கலாம். நாங்கள் ரெண்டு பேரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற காரணத்தினால் நாங்களே ஒருவருக்கொருவர் பாராட்டி பேசுவதற்கு அவசியம் இல்லை என கருதுகிறேன். இந்த மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக திருமாவும், நாங்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளோம். மாவட்ட வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்.

அடித்தட்டு மக்கள் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் போது ஆபத்தில் இருந்து காப்பவர்களாக, கேடயமாக திகழ்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினரும், விடுதலை சிறுத்தைகளும், இணைந்து மகத்தான பணியை மேற்கொண்டிருக்கிறோம். கடந்த நாடளுமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மட்டுமல்லாத மேடையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து போராடியதால்தான் பிஜேபி தமிழ்நாட்டில் தலைகாட்டமுடியாத வகையில் செய்யப்பட்டது. தி.மு.க. தலைமையிலான அணி தான் சனாதன, மதவெறி பிடித்திருக்கிறக் கூட்டத்தை தமிழ்நாட்டில் இருந்து அகற்றும் காரியத்தை செய்து இருக்கிறோம்.

இந்திய சமூகம் சாதியாக, மதமாக பிரிந்து இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களை அனைத்தும் தனியாருக்குத் தாரைவார்த்து விட்டனர். இனிமேல் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆள் எடுப்பது இருக்காது. போராடி பெற்ற இட ஒதுக்கீடு கொள்கை எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பியவர், விவசாயிகள் 12 மாத காலமாக விவசாய நிலங்கள் கார்ப்பரேட் கைக்கு போய்விடக்கூடாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதானிக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 1000 கோடி வருமானம். ஒரு நொடிக்கு எவ்வளவு என எண்ணிக் கொள்ள வேண்டும். இந்திய நாடு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாகியுள்ளது. திருமாவின் மாற்று அரசியல் பாதை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருமாவளவனை வாழ்த்திப் பேசினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT