ADVERTISEMENT

காலபைரவர் கோவிலில் வைகுண்டராஜன் நடத்திய யாகம்! - பின்னணி என்ன?

07:58 PM Mar 06, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த புகாரில் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் கோரப்பட, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், தேய்பிறை அஷ்டமி நாளான (6-ஆம் தேதி) இன்று அதிகாலை 4 மணிக்கெல்லாம், விருதுநகர் மாவட்டம் - காரியாபட்டியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வைரவநாங்கூரில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் திருக்கோவிலுக்கு வைகுண்டராஜன் வந்தார். அவரது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய போலீஸ், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே பி.கே.லாட்ஜ் என்ற பெயரில் விடுதி நடத்தும் பி.கே.கண்ணன் மற்றும் சிலர் வந்திருந்தனர். திருநெல்வேலியில் இருந்து புரோகிதர் அழைத்து வரப்பட்டு யாகம் நடத்தினார்கள். யாகக் குண்டத்தில் அனைத்து வகையிலான சாதங்களும், பேரிச்சம்பழம் உள்ளிட்ட பழங்களும் போடப்பட்டன. காலை 9 மணியிலிருந்து 10-30 வரையிலான ராகு காலத்தில், ஸ்ரீகாலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர். 11.00 மணிக்கு மேல்தான், கோவிலில் இருந்து கிளம்பினார் வைகுண்டராஜன்.

திருநெல்வேலி மாவட்டம், கீரைக்காரன் தட்டு கிராமத்திலிருந்து, விருதுநகர் மாவட்ட ஸ்ரீகாலபைரவர் கோவிலுக்கு வந்து, எதற்காக யாகம் நடத்தினாராம் வைகுண்டராஜன்?

அந்தக் கோவில் தரப்பில் “தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கினால் எதிரிகள் பலமிழப்பார்கள். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் பலப்படும். ஆபத்திலிருந்து காப்பதற்கே தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடத்தப்படுகிறது. அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. மேலும், தேய்பிறை அஷ்டமியானது மரண பயத்தைப் போக்கும் அற்புதமான வழிபாடாகும். சிவாலயங்கள் அனைத்திலும், திறக்கும்போதும், இரவில் கோவிலை மூடும்போதும், பைரவ பூஜை நடக்கும். சிவன் சொத்துகளை காவல் காக்கும் அதிகாரியாகவும், நாயை வாகனமாகக் கொண்டு திகம்பரராகக் காட்சி தருபவராகவும் ஸ்ரீகால பைரவர் இருக்கிறார். இவரே, கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பல்வேறு ரூபம் கொண்டவராகத் திகழ்கிறார்” என்று பரவசத்துடன் கூறினார்கள்.

கொலை மிரட்டலைத் தொடர்ந்து, தனது குடும்பத்தாரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருநெல்வேலி டிஐஜி அலுவலகத்தில் வைகுண்டராஜன் புகார் தர, பாதுகாப்புக்காக சுழற்சி அடிப்படையில், ஆயுதம் தாங்கிய போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிரிகள் பலமிழந்து, வைகுண்டராஜன் பலம் பெறுவதற்காகவே நடத்தப்பட்டுள்ளது இந்த யாகம்!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT