ADVERTISEMENT

சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து வந்த நகராட்சி ஊழியரைத் தாக்கிய பெண்

01:25 PM Nov 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகையில் சாலைகளில் சுற்றித்திரிந்த 40க்கும் மேற்பட்ட மாடுகளைப் பிடித்த நகராட்சி ஊழியர்களை மாட்டின் உரிமையாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சட்டையைப் பிடித்து இழுத்துத் தாக்கிய சம்பவத்தால் நகராட்சி ஊழியர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வெளிப்பாளையம், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வாயில் உள்ளிட்ட மக்கள் அதிகம் புழங்கக்கூடிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் என எங்குப் பார்த்தாலும் மாடுகள் சுற்றித் திரிகிறது. பகல் பொழுதில் கவனமாகச் சென்றாலும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். அதுவும் ரவுண்டான வளைவுகளில் படுத்திருக்கும் மாடுகளால் இரவு நேரத்தில் டூவீலரில் பயணிப்பவர்கள் பலமுறை விழுந்து பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

தற்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும், சாலைகளில் உள்ள குண்டு-குழிகள் தெரியாமலும் வாகன ஓட்டிகள் பெரும் விபத்தைச் சந்திக்கின்றனர். இந்த நிலைமையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தினசரி அதிக விபத்து நடக்கிறது. இதனால், விபத்தை ஏற்படுத்தும் கால்நடைகளை அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இரவு நாகப்பட்டினம் மற்றும் நாகூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் படுத்துக்கொண்டும் குறுக்கும் நெடுக்குமாக சாலைகளில் சுற்றித்திரிந்த 40க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து டெம்போ வேனில் ஏற்றி நாகையில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதையறிந்து அங்கு வந்த மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை விடுவிக்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு கூச்சலிட்டனர். அப்போது கால்நடைகளை பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர்களிடம் மாட்டின் உரிமையாளர்கள் ஒருகட்டத்தில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு நிலவியது.

அப்போது மாட்டின் உரிமையாளரான பெண் ஒருவர், தனது மாட்டை பிடித்து வந்த நகராட்சி ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரது சட்டையைப் பிடித்து இழுத்து தாக்குதலில் ஈடுபட முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாட்டின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால்நடைகளை சாலைகளில் திரியவிட்ட குற்றத்திற்காக 3000 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு உரிமையாளர்கள் அவரவர் மாடுகளை அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி ஊழியர்களை, மாட்டின் உரிமையாளர்கள் பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களின் சட்டையை பிடித்து இழுத்து தாக்குதல் தடுக்க முயன்ற சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT