Nagapattinam District court order Life sentence to four people

மயானத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக, தொழிலாளியை வெட்டிக் கொன்ற தந்தை, மகன்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நாகை நீதிமன்றம்.

Advertisment

நாகை மாவட்டம், கரியாப்பட்டினத்தை அடுத்துள்ள பனையடிகுத்தகையைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு. அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் குடும்பத்தினருக்குமிடையே மயான தொழில் செய்துவருவதில் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி இரவு செல்லக்கண்ணு வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அன்பழகனும் அவரது மகன்களான பாபு(26), கோபு (22) மற்றும் அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (23) ஆகிய 4 பேரும் செல்லக்கண்ணுவை வெளியே வரவழைத்து வம்புக்கு இழுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால், சரமாரியாக வெட்டினர். இதைத்தடுக்க வந்த செல்லக்கண்ணுவின் மனைவி கலைச்செல்விக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

Advertisment

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே செல்லக்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர், செல்லக்கண்ணுவை அரிவாளால் வெட்டி கொலை செய்த ரஞ்சித் மற்றும் அன்பழகன் அவரது மகன்கள் பாபு, கோபு ஆகிய 4 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.