ADVERTISEMENT

கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

09:46 PM Jul 04, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த சாந்தி (36) என்பவர் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அவர் அருகே வந்தார். அப்போது சாந்தியிடமிருந்து மண்ணெண்ணெய் வாசம் அடித்ததால் சந்தேகமடைந்த அந்த காவலர் அவரை சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்திருந்த பையில் 5 லிட்டர் மண்ணெண்ணெய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சாந்தியை விசாரணைக்காக வெளியே அழைத்து வந்தார்.

அப்போது சாந்தி போலீசாரிடம் கூறியதாவது, ''நான் விஜயமங்கலம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் சுகந்தன். கடந்த 14 வருடங்களுக்கு முன்பு நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. எனது கணவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பார்சல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். எங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. எனது கணவர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். இந்நிலையில் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரியத் தொடங்கியது. இதையடுத்து சந்தேகமடைந்து நான் விசாரித்தபோது, எனது கணவர் வேலை பார்க்கும் அதே பார்சல் கம்பெனியில் வேலை பார்க்கும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இந்த விஷயம் எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. இதையடுத்து எனது கணவரை கண்டித்தேன். ஆனாலும் அவர் அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்தவில்லை. என் கணவருக்கு எனது மாமனார் மாமியார் ஆதரவாக இருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக எனது கணவர் எங்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார். ஃபோன் செய்தாலும் எடுப்பதில்லை. எனது மாமனார் - மாமியார் என்னுடன் கணவரை சேர்க்க இடையூறு செய்கின்றனர். நான் தற்போது வாடகை வீட்டில் வறுமையுடன் வசித்து வருகிறேன். என் கணவரும் வருவதில்லை. இந்நிலையில் எனது கணவர் மற்றும் அவரது அம்மா, அப்பாவுடன் அந்த பெண் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த நான் இதுகுறித்து ஏற்கனவே எஸ்.பி. அலுவலகம், பெருந்துறை போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தேன்.

இன்று தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தேன். எனக்கு நியாயம் வேண்டும். எனது கணவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டு என்னுடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT