dispute over tips; It is a pity that he lost his sight due to attack

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஈரோடு ரயில்வே லோகோ செட் விவேகானந்தர் நகரை சேர்ந்த சந்தோஷ் (34) என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.

Advertisment

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- 'நான் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். இந்நிலையில் சம்பவத்தன்று நானும்எனது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து திண்டலில் உள்ள ஒரு தனியார் பாருக்கு சென்றோம். மது ஆர்டர் செய்து விட்டு உணவுப் பொருட்களுக்கும் ஆர்டர் கொடுத்தோம். அப்போது உணவை பரிமாறும் பணியாளர் இரவு ரொம்ப நேரமாக ஆகிவிட்டது. பணத்தை செலுத்தி விடுங்கள் என்று கூறினார். உடனே நான் கடன் அட்டையை பயன்படுத்தி பணத்தை செலுத்தினேன். பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பும்போது என்னுடைய விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் திடீரென மாயமானது.

Advertisment

இதுகுறித்து பணியாளரிடம் கேட்டபோது, அவர் டிப்ஸ் பணம் கொடுங்கள் சார் போனை கண்டுபிடித்து தருகிறேன் என்றார். அதற்கு நான் பணம் தன்னிடம் இல்லை கடன் அட்டை பயன்படுத்தி தான் பில்லை செலுத்தியுள்ளேன் என்றேன். அப்போது அந்த பணியாளர் தரக்குறைவாக பேசினார். இதுகுறித்து தனியார் பாரின் பொறுப்பாளரிடம் தகவல் தெரிவித்தேன். அவர் உடனடியாக அங்குள்ள பணியாளர்களை வைத்து என்னையும் எனது நண்பர்களையும் தாக்க சொன்னார். அவர்களும் மது பாட்டில்களால் என்னையும் எனது நண்பர்களையும் தாக்கினர். இதில் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தபோதுமது பாட்டிலால் எனது வலது கண்ணில் அடித்தனர். இதில் என்னுடைய வலது கண் பார்வை முற்றிலும் பறிபோனது. இடது கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.

இதனால் நான் வேலைக்கு செல்ல முடியாமல் என் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. மேலும் சம்பந்தப்பட்ட பார் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் என்னைதொடர்ந்து மிரட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பார் பொறுப்பாளர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் எனது இரண்டு குழந்தைகளையும் கருணை கொலை செய்து விட்டு நானும் எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்வோம். இதைத் தவிர வேறு வழியில்லை' இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.