ADVERTISEMENT

அதிமுக எம்பி மகன் ஏமாற்றிவிட்டார்: புகார் கொடுக்க ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்ற பெண்ணால் பரபரப்பு

09:25 AM Apr 02, 2018 | rajavel



சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா. 35 வயதான இவர், வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். “நானும், ராமநாதபுரம் எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியும் காதலித்தோம். அதனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். நானும் முஸ்லிம் மதத்திற்கு மாறினேன்.

ADVERTISEMENT

சில மாதங்களில் நாசர் அலியின் போக்கு மாறியது. அவரிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினேன். ஆனால் நாசர் அலி திருமணத்திற்கு மறுத்தார். அதனால் அவரது குடும்பத்தினரிடம் இது பற்றி கூறினேன். முதலில் திருமணம் செய்து வைப்பதாக கூறிய அவர்கள், பின்னர் மறுப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.

ADVERTISEMENT

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில் நாசர் அலிக்கும், காரைக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காரைக்குடியில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ரொபினா கோரினார். இதுதவிர திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகிகளிடமும் அவர் புகார் அளித்தார். மேலும் திருமணம் நடைபெற்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும் அங்கு நாசர் அலிக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் அன்வர்ராஜா எம்.பி. மகன் நாசர் அலியை கைது செய்யாமல் போலீசார் காலதாமதம் செய்வதாகவும், உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்திப்பதற்காக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேற்று காலை ரொபினா வந்தார்.

கவர்னர் மாளிகைக்கு முன் அவரை தடுத்து நிறுத்திய போலீசார், உரிய அனுமதி பெறாமல் உள்ளே செல்லக்கூடாது என கூறினார்கள். ஆனால் கவர்னரை சந்தித்துவிட்டுத்தான் செல்வேன் என்று அவர் கூறினார்.

இதையடுத்து கவர்னர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக ரொபினாவை கிண்டி போலீசார் கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT