ADVERTISEMENT

லஞ்சம் கேட்டு அரசு மருத்துவருக்கு மிரட்டல்; பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது! 

11:58 AM Jul 31, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மகிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஆய்வாளராகப் பதவி ஏற்றிருக்கிறார். இவரிடம், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் கருக்கலைப்பு வழக்கு ஒன்று வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார் ஆய்வாளர் மகிதா. இந்த விசாரணையின் முடிவில், 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட டாக்டரிடம் பேசிய ஆய்வாளர், ‘இங்க பாருங்க சார்.. நீங்க பண்ணுனது சட்டப்படி மிகப்பெரிய குற்றம்...’ எனப் பேச ஆரம்பித்துள்ளார். மேலும் டாக்டருடன் பேசிய ஆய்வாளர் இந்தக் குற்றச்செயல் பெரிய கேசா ஆகாம நான் பாத்துக்கிறேன். ஆனால் எனக்கு நீங்க 12 லட்சம் ரூபாய் பணம் மட்டும் கொடுங்க எனக் கேட்டதாகத் தெரிகிறது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அரசு மருத்துவர், பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும், இந்த விஷயத்தைத் தனது நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துள்ளார். அப்போது, டாக்டரின் நண்பர்கள் சிலர், ‘சார்.. இது குறித்து தாம்பரம் ஆணையர் அமல்ராஜிடம் கம்ப்ளைன்ட கொடுப்பதுதான் சரி’ எனக் கூறியுள்ளனர். அதன்படி, சம்பந்தப்பட்ட டாக்டர், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், லஞ்சம் கேட்டுத் தன்னை மிரட்டுவதாகத் தாம்பரம் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட தாம்பரம் ஆணையர் அமல்ராஜ், இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது, ஆய்வாளர் மகிதா, லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கூடுவாஞ்சேரி ஆய்வாளர் மகிதா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மகிதா தலைமறைவானார். அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆய்வாளர் மகிதாவைப் பொன்னேரி அருகே போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் மகிதாவைச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT