ADVERTISEMENT

பெண் தொழிலதிபரிடம் ரூ. 36 லட்சம் மோசடி! வழக்கறிஞர் உட்பட இருவர் மீது வழக்கு!!

04:18 PM Jul 15, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

குரு இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

நீதிமன்றத்தை ஏமாற்றி போலி ஆவணம் மூலம் வழக்கை வாபஸ் பெற்ற வழக்கறிஞர் உள்பட இருவர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் அன்பரசி. இவருக்கு மதுரையைச் சேர்ந்த முரளி, குணசேகரன், சரவணன் ஆகிய மூன்று பேர் நிலத்தை ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் பெறுவதற்காக கடந்த 1999ஆம் ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி கிரைய உடன்படிக்கை ஏற்பட்டது. அதன் பின் நில உரிமையாளர்கள் மூவரும் நிலத்தை வேறு நபருக்கு திடீரென விற்றுவிட்டனர்.

இதனால் அன்பரசி, பணத்தை திருப்பித் தர வலியுறுத்தி மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனடிப்படையில் நீதிமன்றமும் ரூ. 28 லட்சத்து 66 ஆயிரத்து 660 ரூபாயை மற்றும் அந்தப் பணத்திற்கான 6 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. அப்படி இருந்தும் பணம் தராததால் உத்தமபாளையத்தில் உள்ள பங்குதாரர்களின் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க அன்பரசி தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால் பங்குதாரர்கள் பல்வேறு தவணைகளில் நீதிமன்றத்தில் 44.75 லட்சத்தை திருப்பி செலுத்தினார்கள்.

அதேசமயம், இந்த விவகாரம் குறித்து தொழிலதிபர் அன்பரசியின் கணவர் பாக்கியராஜ், தனது நண்பர் திண்டுக்கல்லில் உள்ள ஆடிட்டர்(CA) சீனிவாசனிடம் தெரிவித்துள்ளார். அவரின் ஏற்பாட்டின் பெயரில், இந்த வழக்கை நடத்த தேனியைச் சேர்ந்த வழக்கறிஞரான குரு இராதாகிருஷ்ணனை (ஓ.பி.எஸ்.சின் உறவினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார்) நியமித்துள்ளனர்.

ஆடிட்டர் சீனிவாசன்

ஆனால், 44.75 லட்சத்தை முரளி, சரவணன் மற்றும் குணசேகரன் ஆகியோரிடம் இருந்து அன்பரசி பெற்றுக்கொண்டதாக போலி ஆணவத்தை தயார் செய்து அதில் அன்பரசியின் கையெழுத்தை போட்டு அந்தப் போலி ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கை வாபஸ் பெற்றனர்.

இந்த மோசடி விவகாரத்தை அறிந்த அன்பரசி, ஆடிட்டர் சீனிவாசன், வழக்கறிஞர் குரு இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தனக்கு வரவேண்டிய பணத்தை கேட்டுள்ளார். அப்போது இவர்கள், ரூ.8.50 லட்சத்தை மட்டும் அன்பரசியிடம் கொடுத்துள்ளனர். மேலும் மீதி பணம் 36.25 லட்சத்தை கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி அன்பரசிக்கு கொலை மிரட்டலும் விடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அன்பரசி, தனது பணத்தை மீட்டுத் தரக்கோரி திண்டுக்கல் தேனி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயக்குமாரியிடம் கடந்த 29.9.2021 அன்று புகார் மனு கொடுத்தார். அதைத் தொடர்ந்து தேனி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. பரிந்துரையும் செய்திருந்தார். ஆனால், தேனி மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அன்பரசி புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.

இதனால் அன்பரசி, தேனி மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் பணத்தை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தார். இந்த மனுவை விசாரித்த தேனி மாஜிஸ்த்ரேட் நீதிமன்றம், ஆடிட்டர் சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர் குரு இராதாகிருஷ்ணன் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய தேனி மாவட்டக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீமைராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி ஆகியோருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஆடிட்டர் சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர் குரு இராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT