ADVERTISEMENT

சேலம் அருகே போலீஸ் டார்ச்சர் தாங்காமல் விஷம் குடித்த கூலித்தொழிலாளி மனைவி!

10:03 AM Jun 17, 2018 | Anonymous (not verified)

சேலம் அருகே, காவல்துறையினரின் டார்ச்சர் தாங்காமல் பூச்சி மருந்து குடித்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள காடையாம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் டயர் கம்பெனியில் கூலி வேலை செய்கிறார். இவருடைய மனைவி சரளா (30). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை.

இவர்கள், கடந்த சில ஆண்டுகளாக, எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் வீடு எடுத்து வசித்து வருகின்றனர். சரளாவின் கணவர் விஜயகுமாரின் தம்பி விஜய் ஆனந்த். அவர் தனது தாயாருடன் ஈரோடு மாவட்டம் கோபியில் வசிக்கிறார். அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

விஜய் ஆனந்த் கவுந்தம்பாடியைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளுடன் உள்ள சுகுணா (34) என்ற பெண்ணுடன் பழகி வந்ததாகத் தெரிகிறது. அந்தப் பெண்ணும், விஜய் ஆனந்தும் கடந்த 11ம் தேதி முதல் திடீரென்று தலைமறைவாகி விட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், கவுந்தம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் எஸ்ஐ குணசேகரன் மற்றும் சுகுணாவின் தம்பி, ரவுடிகள் என 10 பேர், விஜய் ஆனந்தைத் தேடி சேலத்தில் உள்ள அவருடைய அண்ணன் விஜயகுமார் வீட்டிற்கு நேற்று (ஜூன் 15ம் தேதி) வந்தனர். அங்கு விஜயகுமாரையும், அவருடைய மனைவி சரளாவையும் அந்த கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது.

எஸ்ஐ குணசேகரன், விஜய் ஆனந்தை கண்டுபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்காவிட்டால் கை, காலை உடைத்து ஜெயிலில் தள்ளி விடுவேன் என்று மிரட்டியதோடு, ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதனால் அவமானம் தாங்காமல் சரளா, நேற்று இரவு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சரளா கூறியது:

எங்களுக்கும், என் கணவரின் தம்பி விஜய் ஆனந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. எப்போதாவதுதான் அவர் சேலம் வந்து செல்வார். இந்த நிலையில் அவர், சுகுணா என்ற பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக கவுந்தம்பாடி எஸ்.ஐ குணசேகரன், சுகுணாவின் தம்பியும், ரவுடிகளும் எங்களை வீடு புகுந்து மிரட்டுகின்றனர்.

எஸ்ஐ குணசேகரன் போன் மூலமாகவும், நேரிலும் வந்து, 'போலீஸ் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும் தெரியுமில்லையா?' என மிரட்டினார். அவருடன் வந்த ரவுடிகள், 'நாங்கள் முதலமைச்சரின் உறவினரின் சப்போர்ட்டோடு வந்திருக்கிறோம். யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது,' என்று மிரட்டினர்.

சரளா

ஓடிப்போன சுகுணாவின் தம்பி எங்கள் வீட்டிற்கு வந்து, 'உன் கொழுந்தனார் எங்க அக்காவை கூட்டிக்கொண்டு வரும்வரை நீ என்னிடம் வாடி. எங்க அக்கா வந்ததும் நாங்கள் உன்னை அனுப்பி விடுகிறோம்,' என்று ஆபாசமாக பேசினார். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

போலீஸ் ஒரு பக்கம், ரவுடிகள் இன்னொரு பக்கம் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றனர். இதனால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள நினைத்து விஷம் குடித்து விட்டேன். எஸ்ஐ குணசேகரன் மற்றும் மிரட்டல் விடுத்த ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்திருக்கிறேன். இவ்வாறு சரளா கூறினார்.

சரளாவை மிரட்டியதாகக் கூறப்படும் கவுந்தம்பாடி போலீஸ் எஸ்ஐ குணசேகரனிடம் விசாரித்தோம்.

''சுகுணாவை இழுத்துக்கொண்டு ஓடியதாக புகார் கூறப்பட்ட விஜய் ஆனந்த், கோபியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் வேலையில் இருந்தார். அப்படி கடன் உதவி கொடுக்கப்பதற்காக சென்று வந்ததில் மகளிர் குழுவைச் சேர்ந்த சுகுணா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஓரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

போகும்போது சுகுணா வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய், 18 பவுன் நகைகள், ஒரு ஸ்கூட்டி ஆகியவற்றையும் எடுத்துச் சென்று விட்டதாக விஜய் ஆனந்த் மீது புகார் கொடுத்துள்ளனர். அதை விசாரிக்கத்தான் சேலத்தில் உள்ள விஜய் ஆனந்தின் அண்ணன் வீட்டிற்குச் சென்றேன்.

அப்போது சரளாவுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், வக்கீல் ஒருவரும் இருந்தனர். அப்படி இருக்கும்போது நான் எப்படி சரளாவையும், அவருடைய கணவரையும் மிரட்ட முடியும்? என் சர்வீஸில் நான் யாரையும் மிரட்டியது இல்லை. அந்தம்மா, வேண்டுமென்றே பொய் சொல்கிறார்,'' என்றார் எஸ்ஐ குணசேகரன்.

சரளா அளித்த புகார் குறித்து எடப்பாடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT