ADVERTISEMENT

மேயர் வேட்பாளர் யார்? களத்தில் குதித்த அமைச்சர் குடும்பம்!! திண்டுக்கல் மல்லுக்கட்டு!!!

08:53 PM Dec 01, 2019 | kalaimohan

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக ஜெ.அறிவித்தார் அப்படி இருந்தும்கூட மாநகராட்சிக்கான வரைமுறையை விரிவுபடுத்த இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே 60 வார்டுகளில் செயல்படக்கூடிய மாநகராட்சி 48 வார்டுகளில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 572 வாக்காளர்கள் உள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தநிலையில்தான் உள்ளாட்சியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளை மறைமுகத் தேர்தல் நடத்த எடப்பாடி அரசு முடிவு செய்து இருப்பதால் கவுன்சிலர்கள் மூலம் மேயர் சேர்மன் பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளை தேர்வு செய்ய இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் திண்டுக்கல் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்வு நடைபெற இருக்கிறது. அதுலயும் திண்டுக்கல் மாநகராட்சி இந்தமுறை பெண் மேயருக்கு ஒதுக்கியதால் ஆளும் கட்சி எதிர்க் கட்சிகளுக்கு இடையே மேயர் வேட்பாளருக்கான போட்டியும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஆளும் கட்சியில் உள்ள மாவட்ட செயலாளரும், மத்திய வங்கி கூட்டுறவு தலைவருமான மருதராஜ்தான் கடந்தமுறை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தார். தற்போது இந்த மாநகராட்சியை பெண்களுக்கு ஒதுக்கியதால் தனது மகள் பொன்முத்துவை மேயராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். அதற்காகவே பொன்முத்து களத்தில் இறக்கி எட்டாவது வார்டில் கவுன்சிலர் சீட் கேட்டு விருப்ப மனு கொடுக்க வைத்திருக்கிறார். அதுபோல் அமைச்சர் சீனிவாசனின் ஐந்து மகன்களும் கட்சி பொறுப்புகளிலும், பதவிகளிலும் பெரிதாக இல்லை அதனால் ஏதாவது ஒரு மகனை மேயராக வேண்டும் என்று சீனிவாசன் நினைத்திருந்தார்.


ஆனால் பெண் மேயருக்கு'னு மாநகராட்சியை ஒதுக்கியதால் மருமகள்களை களத்தில் இறக்கி அதில் ஒரு மருமகளை மேயராக்க அமைச்சர் சீனிவாசன் முடிவு செய்திருக்கிறார். அதற்காகவே அமைச்சர் சீனிவாசனின் மகன்களான ராஜ்மோகனின் மனைவி விமலா, வெங்கடேசன் மனைவி மகாலட்சுமி, டாக்டர் பாலு மனைவி அபி, சதீஷ் மனைவி சிந்து, பிரபு மனைவி காயத்திரி ஆகிய ஐந்து மருமகள்களும் மாநகராட்சியில் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள ஐந்து வார்டுகளில் களத்தில் குதிக்க விருப்பம்மனு கொடுத்திருக்கிறார்கள். இப்படி மாவட்ட செயலாளர் குடும்பம் அமைச்சர் குடும்பத்தினர் மேயர் வேட்பாளருக்கு விருப்பமான கொடுத்திருந்தாலும் கூட மாவட்ட இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணனின் மனைவி சந்திரா மற்றும் அபிராமி கூட்டுறவுவங்கி தலைவர் பாரதி முருகனின் மனைவி மற்றும் முன்னாள் எம்எல்ஏ பிரேம்குமார் மனைவி உட்பட சில மகளிர் அணியினரும் மேயர் வேட்பாளராக வார்டில் குதிக்க விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஆளுங்கட்சியில் கடும் போட்டி நடந்து வருகிறது.


திமுகவை பொறுத்தவரை மாவட்டத்தில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் இருந்தும்கூட கடந்தமுறை மேயர் பதவியை நழுவவிட்டாச்சு. அதனால் இந்தமுறை 48 வார்டுகளில் 35 வார்டுகளையாவது கைப்பற்றி மேயர் சீட்டில் உட்கார வேண்டும் என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சரும், கழக பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி நேரடியாகவே வார்டில் கவனம் செலுத்தி வெற்றி பெறக்கூடிய உ.பி.க்களையும், மகளிர் அணியினரையும் களத்தில் இறக்க தயாராகி வருகிறார்.


அதோடு பெண்களுக்கு மேயர் பதவியை ஒதுக்கியதால் பெண் மேயர் வேட்பாளராக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளரும், ஐ.பி.யின் தீவிர ஆதரவாளருமான ஜெகனின் மனைவி சித்திரா 31வது வார்டில் களமிறங்க விருப்ப மனு கொடுத்திருக்கிறார். அதுபோல் முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி மனைவி சாந்தி 9 வது வார்டில் போட்டிபோட மனு கொடுத்திருக்கிறார். அதோடு முன்னாள் கவுன்சிலர்களான அருள்வாணி, சகாயமேரி இப்படி சிலர் மகளிர் அணியினரும் விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஐ.பி.யின். தீவிர ஆதரவாளரான ஜெகனின் மனைவி சித்திரா தான் மேயர் வேட்பாளர் என உ.பி.க்கள் மத்தியிலே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தற்போதுதான் மாநகர செயலாளர் ராமுத்தேவர் கட்சிப் பொறுப்பாளர்களிடமும், மகளிர் அணியினரிடமும் கவுன்சிலர்களுக்கு போட்டி போடுபவர்களுக்கான விருப்பமனு வாங்கி வருகிறார். இதில் மேயர் வேட்பாளர் என்பது வெற்றி பெற்ற பின்புதான் முடிவு செய்யப்படும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிபோல் முன்கூட்டியே மேயர் வேட்பாளர் யார் என அறிவிக்கமாட்டோம் மாநகராட்சி கவுன்சிலர்கள்களுக்கு போட்டி போடும் 24 பெண்களுமே மேயர் வேட்பாளர்தான் என மாநகர செயலாளர் ராமுத்தேவர் ஒருபுறம், மகளிரணியினரை உற்சாகப்படுத்தி வருகிறார். இப்படி அதிமுக., திமுக., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் மாநகராட்சி தேர்தலில் போட்டி போட ஆர்வம் காட்டி வருகிறார்களே தவிர கூட்டணி கட்சிகள் மத்தியில் எந்த ஒரு ஆர்வத்தையும் பார்க்க முடியவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT