ADVERTISEMENT

“திமுக எம்.பி.க்கள் எழுந்தாலே பாஜகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர்” - சுப்ரியா சுலே எம்.பி.

07:07 PM Oct 14, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்து வருகிறார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்ற பாரதியார் பாடலைப் பாடி பேசுகையில், “வணக்கம் சென்னை, சமூக நீதியில் நீண்ட பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு. நாடாளுமன்றத்தில் மக்கள் சார்ந்த ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் கட்சியாக திமுக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் சக்திகளை எதிர்த்து தமிழ்நாடு போராடி வருகிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக டெல்லியில் இருந்து முன்னெடுக்கப்படும் படையெடுப்புகளை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது.

பெண்கள் நலனுக்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்கள் பாராட்டுக்குரியது. நாடாளுமன்றத்தில் கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் எழுந்தாலே பாஜகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர். கூட்டாட்சி தத்துவத்திற்காக தமிழ்நாடு குரல் கொடுத்து வருவதை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT