ADVERTISEMENT

எச்.ராஜா பேசிய வார்த்தைகளை நாங்களோ, பிற இயக்கங்களோ பயன்படுத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? சீமான்

04:04 PM Sep 17, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

காவிரி நதிநீர் உரிமைக்காக கடந்த 15-09-2016 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியின் போது தனது உயிரைத் தீக்கிரையாக்கிக்கொண்டு உயிர் நீத்த பா.விக்னேசுவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று 16.09.2018 காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், ‘’பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் காவிரி நதிநீர் உரிமையை மீட்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்த வேளையில் அவ்வுரிமையின் அவசியத்தை உணர்த்தும்பொருட்டு தன்னுயிரைத் தந்த ஈக மறவன் காவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசின் நினைவுநாள் இன்று. நாம் தமிழர் என்ற உணர்வினைக் கொண்டு ஒருங்கிணைந்து நின்று, இழந்துவிட்ட உரிமைகளை மீட்கவும், பாதுகாக்கவும் போராடிக் கொண்டிருக்கிற நாம் தமிழர் பிள்ளைகள் அந்த ஈக மறவனுக்குப் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

எச்.ராஜா பேசிய வார்த்தைகளை நாங்களோ, பிற இயக்கங்களோ பயன்படுத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? சனநாயகப் பேராற்றல்களாக இருக்கிற ஊடகங்கள்தான் அதனை மக்களுக்குச் சொல்ல வேண்டும். பொதுவெளியில் தமிழினத்தின் பெரும் அறிஞராக இருக்கும் மதிப்புமிக்க வைரமுத்து அவர்களைப் பற்றியும், அவரது தாயார் பற்றியும் மிக இழிவாகப் பேசுகிறார். அதற்கு அவரது கட்சியின் தலைமையோ, ஆளுகிற அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைப் போலத் தற்போது காவல்துறையினரைப் பற்றியும், உயர்நீதிமன்றத்தைப் பற்றியும் மிக இழிவாகப் பேசுகிறார். அதிகாரத்திற்கு வந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையினைத்தான் இதுவெல்லாம் காட்டுகிறது. இதனைத்தான் அதிகாரத்திமிர் என்கிறோம். அப்படியானால், சட்டமும், திட்டமும் சாமானியர்களுக்கு மட்டும்தானா? அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் அப்பாவிகளுக்கு மட்டும்தானா? என்கிற கேள்வியைத்தான் இதுவெல்லாம் எழுப்புகிறது. அதிகாரத்தின் உயரத்தில் இருப்பவர்களுக்குச் சட்டம் கைகட்டி நிற்கும் என்றால் எப்படிச் சனநாயக ஆட்சிமுறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்? சட்டம் அடிபணிந்து நிற்குமானால் பாரபட்சமின்றி மக்களுக்குச் சமநீதியை வழங்கும் என்று எவ்வாறு நம்ப முடியும்? எச்.ராஜா தான் வகிக்கிற பொறுப்பு, தனது வயது போன்றவற்றிற்காகவாவது பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து வாய்க்கு வந்தபடி தான்தோன்றித்தனமாகப் பேசுவது அழகல்ல!


விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தமிழ் மண்ணில் திட்டமிட்டுத்தான் உட்புகுத்தப்பட்டது. 10, 15 ஆண்டுகளாகத்தான் அதிகளவில் இது பெரிதுபடுத்தப்படுகிறது. அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அதிகளவில் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுகிறது. இங்கு விநாயகரைக் கொண்டாடுகிற அளவுக்குத் தமிழர் இறையாக இருக்கிற முருகனை எவரும் கொண்டாடுவதில்லை. விநாயகர் சதுர்த்தி, குருநானக், சரஸ்வதி பூஜை இவற்றிற்கெல்லாம் அரசு விடுமுறை விடப்படுகிறது. தைப்பூசத்திற்கு மட்டும் விடுமுறைவிடப்படுவதில்லை. இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களும், வழிபாடுகளும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டு அதனை மீட்டெடுப்பதற்குத்தான் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்கி எல்லாவற்றையும் மீட்டெடுக்கிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம்.

நீண்ட காலச் சட்டப்போராட்டத்தின் விளைவாகத்தான் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதன்பிறகு, 161வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கு ஆளுநரை ஒப்புதல் அளிக்கச் செய்வதுதான் எழுவரின் விடுதலைக்கான வாய்ப்பாக இருக்கிறது. இதில் ஆளுநர் தாமதப்படுத்துவது மூலம் அவர் யாருக்கானவர் என்பது நமக்குத் தெரிகிறது. அத்தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காவிட்டால் போராட்டங்களை முன்னெடுத்து அழுத்தம் கொடுத்து விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம்.


தனது தந்தை செய்யாததைத் தான் செய்யப்போவதாகக் கூறுகிறார் ஸ்டாலின். இவர்கள் தனது ஆட்சியில் முதலில் என்ன செய்தார்கள்? மாநிலத் தன்னாட்சி என முழக்கத்தை முன்வைத்தார்கள். இன்றைக்கு மாநிலத்தில் என்ன தன்னாட்சி அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள்? மாநில அரசிடம் கல்வி, மருத்துவம், வரி என எந்த அதிகாரமும் இல்லை. இப்போது தேர்வு முறையும் கையைவிட்டுப் போய்விட்டது. நாங்கள்தான் படிக்க வைத்தோம் என்கிறார்கள். தான் விரும்பிய படிப்பைப் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனாளே தங்கை அனிதா, அதற்கு யார் காரணம்.? யார் அதற்குப் பொருட்பேற்பது? இந்தியை எதிர்த்துப் போராடினோம் என்றார்கள். இந்தியை எதிர்க்காத கேரளாவில் இந்தி குறைவாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இன்றைக்கு எந்த இடத்தில் இந்தி இல்லை? செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் முத்திரையே இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருக்கிறது. ஆகவே, இவர்கள் இடுவது எல்லாம் வெற்றுக்கூச்சல்கள்தான்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT