ADVERTISEMENT

"வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக நல வாரியம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

01:15 PM Oct 06, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (06/10/2021) வெளியிட்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும். புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு புதிய வாரியம் அமைக்கப்படும். புலம்பெயர் தமிழர் நல வாரியம், புலம்பெயர் தமிழர் நல திட்டங்களுக்காக மொத்தம் ரூபாய் 20 கோடி ஒதுக்கப்படும். எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குத் தமிழ்நாடுதான் தாய்வீடு. அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமை. உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம் தமிழினம்தான் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்னையைத் தீர்க்க, உதவி செய்ய அரசு முன்வந்துள்ளது.

தமிழர் சங்கங்களுடன் இணைந்து ஜனவரி 12ஆம் தேதி புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம் ஏற்படுத்தி, அதில் பதிவு செய்வோருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். குறைந்த வருவாய் பிரிவினர் வெளிநாடுகளில் இறக்க நேரிட்டால் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கப்படும். சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெளிநாடு பயண புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும். புலம்பெயர் தமிழர்கள் ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி, வலைதளம், செயலி ஆகியவை அமைத்து தரப்படும். புலம்பெயர் தமிழர்களுக்கு என தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும். கரோனா சூழலால் நாடு திரும்பியவர்கள் குறுதொழில் செய்ய ரூபாய் 2.5 லட்சம் மானியத்துடன் கடன் வசதி செய்து தரப்படும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT