ADVERTISEMENT

"மக்களின் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்!' அன்புமணி ராமதாஸ் பேச்சு!

07:21 PM Mar 28, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு உள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது நிலக்கரி தோண்டி எடுப்பதற்காக ஏற்கனவே உள்ள சுரங்கங்களை விரிவாக்கம் செய்வதற்காகவும், புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காகவும் என்.எல்.சி நிறுவனம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் என்.எல்.சி ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் 'நெய்வேலி சுரங்கம் என்ற பெயரில் நிலங்களைப் பறிப்பதா?' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருத்தாசலம் அருகேயுள்ள சிறுவரப்பூரில் மக்கள் சந்திப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை தலைவர் கே.பாலு, மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பா.ம.க இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும்போது, "பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து இந்த மண்ணிலேயே வாழ்ந்து வரும் மக்களுக்கு இந்த மண் மட்டுமே வாழ்வாதாரம். இந்த மண்ணை நம்பிதான் அவர்களும், அவர்களின் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் இவ்வளவு ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மண்ணை பிடுங்கி எடுப்போம் என்று என்.எல்.சி நிர்வாகம் கங்கணம் கட்டியிருக்கிறது. பா.ம.க என்றுமே வளர்ச்சிக்கு எதிரான கட்சி கிடையாது. நமக்கு வளர்ச்சி தேவை. வாழ்வாதாரத்தைப் பிடுங்கி, விவசாய நிலத்தைப் பிடுங்கி வளர்ச்சி என்ற போர்வையில் என்.எல்.சி நிறுவனம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த மக்கள் ஒரு பிடி மண்ணை கூட தரமாட்டோம் எனக் கூறியுள்ளார்கள். அவர்களுக்குப் பாதுகாவலராக டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். ஒரு பிடி மண்ணை மக்கள் அனுமதியில்லாமல் எடுக்க விடமாட்டோம்.

என்.எல்.சி நிர்வாகம் என்று இந்த மாவட்டத்திற்குள் நுழைந்ததோ அன்றே இந்த மாவட்டம் சீரழியத் தொடங்கி விட்டது. என்.எல்.சி நிர்வாகம் 1956 ல் தொடங்கப்பட்ட நிறுவனம். ஒரு சில லட்சங்களை வைத்து அன்று 44 கிராமங்களில் முப்போகம் விளையும் 37 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்கி எடுத்துவிட்டார்கள். அந்த 44 கிராமத்தில் உள்ள 44 ஆயிரம் மக்கள் எங்கே செல்வது எனத் தெரியாமல் நின்றனர். அதன் பிறகு நிலத்தடியில் இருக்கின்ற நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்பி வருகிறது. இது எங்குமே நடக்காத செயல். தன்னூற்று அதாவது ஆர்ட்டீசியன் என்பார்கள். 40, 50 வருடங்களுக்கு முன்பு தானாகத் தண்ணீர் பொங்கி ஊற்றியது. வீடு கட்ட குழி தோண்டினால் தண்ணீர் நிற்கும். இன்று 800, 1200 அடியில் தண்ணீர் உள்ளது. இதுதான் வளர்ச்சியா? 8 அடியில் இருந்த தண்ணீர் 800 அடிக்குச் சென்றதன் காரணம் இந்த என்.எல்.சி நிர்வாகம்.

1956 ல் ஒரு சில லட்சங்களில் முதலீடு செய்த என்.எல்.சி நிர்வாகம் இன்று அதன் மதிப்பு 54 ஆயிரம் கோடி. கடந்த வருடம் லாபம் மட்டுமே 11500 கோடி. இந்த மக்களுக்கும், இந்த மாவட்டத்திற்கும் இந்த நிறுவனம் என்ன செய்தது? தண்ணீரைச் சுரண்டி விவசாயத்தைப் பாழாக்கிய நிறுவனம். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும் என 2008ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு செல்கிறார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் இன்று வரை தொழிலாளர்களை நிரந்தரமாக்கவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களை சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து அழைத்து வருகிறார்கள். இங்கு நாம் கோவணம் கட்டிக் கொண்டு சுற்றித் திரிகிறோம். இனி நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை. அரசியலுக்காக நான் வரவில்லை. விவசாயிகள் எங்குப் பாதிக்கப்பட்டாலும் அங்கே நான் ஓடோடி வருவேன். காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம்.

இன்று ஒட்டுமொத்த காவிரி டெல்டா பகுதியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் 500, 1000, 2000 தருவார்கள். அதன் பிறகு தி.மு.க வும் அ.தி.மு.கவும் வரமாட்டார்கள். இடைப்பட்ட காலத்தில் பா.ம.க மட்டுமே மக்களுடன் இருக்கும். ராணுவமே வந்தாலும், நிலத்தைக் கையகப்படுத்த விடமாட்டோம். ஒரு பிடி மண்ணை கூட விட்டுத் தரமாட்டோம். இனிமேல் பலகட்ட போராட்டம் என் தலைமையில் நடைபெற உள்ளது. தற்போது சுரங்க விரிவாக்கத்திற்காக 49 கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறிவிட்டு எந்த வாக்குறுதியையும் என்.எல்.சி நிறைவேற்றவில்லை.

எனவே என்.எல்.சி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த என்.எல்.சி யால் இந்த மக்களுக்கும், இந்த மாவட்டத்திற்கும் எந்த பயனும் கிடையாது. 1956லிருந்து நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இருக்கின்ற வேலைகளை இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் என்.எல்.சி நிர்வாகத்தை மூடிவிட்டு வெளியேற வேண்டும். 11500 கோடி லாபத்தைக் கொண்டு ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற வெளிமாநிலங்களுக்குச் செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நாமம் போடுகிறார்கள். என்.எல்.சியால் நிலக்கரி துகள்கள் காற்றில் சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் என்.எல்.சியை பாமக எதிர்கொள்ளும். நிலம் கையகப்படுத்துதல் வாழ்வாதார சமுதாய பிரச்சினை என்பதால் எல்.எல்.சி தனது நிலம் கையகப்படுத்துதல் முயற்சியைக் கைவிட வேண்டும்" என்றார்.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ், மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.கார்த்திகேயன், கிழக்கு மாவட்டச் செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில நிர்வாகிகள் மருத்துவர் தமிழரசி, அசோக்குமார், ராஜ.தனபாண்டியன், விஜய்வர்மன், மோகன், விருத்தாசலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கோதை, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் வடக்குத்து ஜெகன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT