ADVERTISEMENT

''ரேஷன் அரிசி இருக்கு புளி இருக்கு ரசம் வெச்சு சாப்பிட்டுக்கிறோம்''-கொட்டித்தீர்த்த தெங்குமரஹடா கிராமம் மக்கள்!

11:44 AM Mar 08, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு மத்தியில் வசிக்கும் தெங்குமரஹடா கிராம மக்கள் சமவெளிப் பகுதிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இதுகுறித்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் தங்களுக்கான மனக்குமுறலை கொட்டித்தீர்த்துள்ளனர் அக்கிராம மக்கள்.

பவானிசாகர் வனப் பகுதியை ஒட்டியுள்ளது தெங்குமரஹடா கிராமம். இக்கிராமத்தில் பழங்குடியினர் அல்லாத 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. புலிகள் காப்பகங்களுக்கு மத்தியில் உள்ள இக்கிராமம் வனவிலங்குகளால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இக்கிராமம் நீலகிரி மாவட்டத்திலிருந்தாலும் தெங்குமரஹடா கிராமத்திற்கு செல்லும் பாதை ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது. கிராமத்தைச் சுற்றி 'மாயாறு' எனும் ஆறு செல்வதால் பரிசல் மூலமாகவே இந்த கிராமத்திற்கு செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. அந்த ஆற்றில் தண்ணீர் திடீரென மயமாக பெருக்கெடுத்து ஓடும் திடீரென வறண்டு காணப்படும் என்பதாலையே அதற்கு மாயாறு என்று பெயர் வைத்துள்ளனர்.

மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து என்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும் நிலை உள்ளது. கிராமத்தைச் சுற்றி சத்தியமங்கலம், முதுமலை புலிகள் காப்பகங்கள் இருக்கிறது. இதனால் வன விலங்குகளின் நலனைக் கவனத்தில் கொண்டு கிராம மக்களை சமவெளிக்கு இடமாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. நீதிமன்றத்தின் பரிந்துரையை அடுத்து கிராம மக்களும் சமவெளிப் பகுதிக்குச் செல்ல விருப்பம் உள்ளதாகக் கடிதம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி 10.30 மணிக்கு இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் தெங்குமரஹடா கிராமத்தில் நடைபெற்றது. ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சத்தியமங்கலம், முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள் தங்களுடைய மனக்குமுறலைக் கொட்டித்தீர்த்துள்ளனர்.

கருத்துக்கேட்பில் கலந்து கொண்ட சுப்புலட்சுமி என்ற பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நாங்கள் இந்த ஊரை விட்டு போவதாக இருந்தால் 15 லட்ச ரூபாய் பணம், 5 சென்ட் இடம், ஒரு ஏக்கர் பட்டா பூமி எல்லாருக்கும் வேணும். சும்மா இங்கயே நாங்க ஏனோதானோனு வாழ்ந்தாச்சு. திரும்பவும் இந்த ஊரைவிட்டு போய் ஏனோதானோனு வாழ நாங்க தயார் இல்லைங்க. ஊர்ல இருக்க எல்லாரும் அப்பாவி மக்க. நாங்க இனி உஷாரா பொழைக்கணுமுங்க. எங்க ஊர் மக்களின் முடிவு இதுதானுங்க. இத கொடுத்தாதான் நாங்க போவோம். இல்லைனா பாலம் போட்டுக்கொடுங்க ஊருக்கு. நாங்க இங்கேயே இருந்துக்கிறோம். கால் கஞ்சியோ அரைக் கஞ்சியோ குடிச்சிக்கிறோம். எங்களுக்கு பாலம்தான் வேணும். எங்ககிட்ட ஓட்டெல்லாம் வாங்குறீங்க ஆனா பாலம் மட்டும் ஏன் போட்டுத்தரமாட்றீங்க. எங்கெங்கையோ இருந்து ஓட்டு கேட்டு இங்க வரீங்க. இதெல்லாம் பண்ணா ஊரவிட்டு போறோம் இல்லைனா பாலம் கட்டித்தாங்க... ரேஷன் அரிசி இருக்கு புளி இருக்கு ரசம் வெச்சு சாப்பிட்டுக்கிறோம்'' என்றார்.

இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகப்படியான மக்கள் ஊரை விட்டு காலி செய்ய விருப்பமில்லை என்றே தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT