ADVERTISEMENT

10.5 சதவீத இட ஒதுக்கீடு; இடைக்காலத் தடை விதிக்க கோரிக்கை இருந்தால் மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

05:01 PM Jul 28, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசாணைக்குத் தடைவிதிக்க அவசியமில்லை என்ற தமிழக அரசின் விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், சட்டத்தை எதிர்த்த வழக்குகளை ஆகஸ்ட் இரண்டாவது வாரம் விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை ஆகியவற்றில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பிற சமுதாயத்தினர் இதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்குகளின் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் காலையில் முறையிடப்பட்டது.

அப்போது, சட்டத்துக்குத் தடை கோரிய வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, இது சம்பந்தமாக பிற்பகலில் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, தலைமை நீதிபதி அமர்வில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் இயற்றப்பட்டதாகவும், சட்டத்தை எதிர்த்து சென்னையில் 24, மதுரையில் 4, உச்ச நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டு, பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை எடுத்துள்ளதால், அதையும் கருத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் விளக்கம் அளித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்த அரசாணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதாலும் அரசாணைக்குத் தடை விதிக்க அவசியமில்லை எனச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, இந்த வழக்குகளை ஆகஸ்ட் 2வது வாரத்தில் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டதுடன், இடைக்காலத் தடை கோரும் கோரிக்கைகள் இருந்தால் மனுத்தாக்கல் செய்யும்படியும் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT