ADVERTISEMENT

கர்நாடகத்தில் கோடைகாலத்தில் நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் எடுப்பது தடுக்கப்பட வேண்டும் - பாலகிருஷ்ணன்

07:47 PM Jun 09, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கர்நாடகத்தில் கோடை பாசனத்தை தடுத்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற நடவடிக்கை மேற்கொள்க என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ADVERTISEMENT

‘’மேட்டூர் நீர்த்தேக்கத்தில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் நடப்பாண்டில் ஜூன் 12ந் தேதி குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 7-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்பது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் முப்போக சாகுபடி மேற்கொள்ளப்பட்ட டெல்டா பகுதி தற்போது படிப்படியாக ஒரு போக சாகுபடிக்கு குறைந்துவிட்டதும், அந்த ஒரு போக சாகுபடிக்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் முழுமையும் வறட்சியால் அழிந்து போவது தொடர்கதையாக உள்ளது. ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வு சோக கதையாக மாறிக்கொண்டுள்ளது.


காவிரி பிரச்சனையில் நீண்ட போராட்டத்திற்குப்பின் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாணையத்தினை உடனடியாக அணுகி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாமல் அணை திறக்க முடியவில்லை என அறிவிப்பது தமிழக அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இதே போல் போதிய தண்ணீர் இல்லை என காரணம் காட்டுவதை கைவிட்டு ஏன் இத்தகைய நிலைமை ஏற்படுகிறது என்பதை தமிழக அரசு பரிசீலித்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வற்புறுத்திட வேண்டும், இல்லையேல் ஆணையம் அமைக்கப்பட்டாலும் நிலைமையில் பெரும் மாறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்பதை கவனப்படுத்த விரும்புகிறோம்.

கர்நாடக அரசு தனது நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீரை கோடைக்காலங்களில் எடுத்து பயன்படுத்திவிட்டு நீர்நிலைகளை காலியாக வைத்திருக்கும் நடைமுறையை கடைபிடிக்கிறது. தென்மேற்கு பருவமழை பொழிந்து அணைகள் நிறைந்த பிறகு தான் உபரியாக உள்ள தண்ணீரை வழங்குவதை கர்நாடகம் வழக்கமாக மேற்கொண்டு வருகிறது. கோடை காலங்களில் நீர்த்தேக்கங்களிலிருந்து கோடை சாகுபடிக்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தக் கூடாது, இதற்கு தடை விதிக்க வேண்டுமென தமிழக அரசு பலமுறை கோரியும் கர்நாடக அரசு செவிமடுக்கவில்லை.

இதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைக்கட்டுக்களுக்கும் தண்ணீர் தேக்கும் அளவு, திறந்து விடும் நாள், திறந்து விடும் அளவு போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தெளிவான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நீர்த்தேக்கத்தையும் இந்த அரசாணைக்கு உட்பட்டுத்தான் இயக்க முடியும். உதாரணமாக மேட்டூர் அணையை பாசனத்திற்கு ஜூன் 12ந் தேதி திறக்க வேண்டும். அதேபோல் ஜனவரி 31-ந் தேதி அணையின் கதவுகள் அடைக்கப்பட வேண்டும்.

பாசனத்திற்கு இதற்கு பின்னர் தண்ணீர் திறக்கக் கூடாது என்கிற கட்டுப்பாடு உள்ளது. இதை பின்பற்றியே கடந்த 80 ஆண்டுகளாக மேட்டூர் அணை செயல்பட்டு வருகிறது.

ஆனால், இதுபோன்ற எந்த கட்டுப்பாடுகளும் கர்நாடகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கோ, அணைக்கட்டுக்களுக்கோ விதிக்கப்படவில்லை. இதன் காரணமாக நீர்த்தேக்கங்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நீரை எடுத்து பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே கோடை காலத்தில் சாகுபடிக்கு தண்ணீரை பயன்படுத்தி நீர்த்தேக்கங்களை காலி செய்து விடுகிறார்கள். இதனால் பெரும்பகுதியான ஆண்டுகளில் கர்நாடக அணைகளிலிருந்து மே, ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீர் அளவு வழங்கப்படுவதில்லை.

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாத போது நாங்கள் எப்படி தண்ணீர் கொடுக்க முடியும் என கர்நாடக ஆட்சியாளர்கள் கையை விரித்து விடுகின்றனர். இதன் விளைவாகவே தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அற்றுப்போவதும், முப்போக சாகுபடி ஒருபோக சாகுபடியாக மாறுவதும் நடந்து வருகிறது.

எனவே, 23.01.2012 அன்று கோடை கால சாகுபடிக்கு கர்நாடகத்தில் தடைவிதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. அதாவது கோடை காலங்களில் உள்ள நீர் இருப்பை அடுத்தாண்டின் பயன்பாட்டிற்கு சேமித்து வைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் தொடர்பாகவே தமிழக நீர்த்தேக்கங்களுக்கு உள்ளது போல கர்நாடக நீர்த்தேக்கங்களுக்கும் சில கட்டுப்பாடுகளைக் கொண்ட விதிகளை உருவாக்குவதற்கு காவிரி மேலாண்மை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வற்புறுத்தப்பட்டது. அதாவது கர்நாடக நீர்த்தேக்கங்களிலிருந்து கோடை காலங்களில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்ற விதி உருவாக்கப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. தற்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் இத்தகைய விதிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மே, ஜூன் மாதங்களில் தமிழகத்திற்கான தண்ணீர் கிடைக்க வேண்டுமானால் கர்நாடகத்தில் கோடைகாலத்தில் நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் எடுப்பது தடுக்கப்பட வேண்டும். இதை செய்வதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதனை நிறைவேற்ற தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT