ADVERTISEMENT

அண்ணியாரே!  கண்ணாடி முன் நின்று கண் திறந்து பாருங்கள்! - தேமுதிக அனுதாபியின் குமுறல்!

01:24 AM Mar 10, 2019 | cnramki

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தக் கேப்டன் ரசிகர் தேமுதிக அனுதாபியும் கூட. ஆனாலும், விஜயகாந்த் குடும்ப ஆதிக்கத்தினால், கடந்த சில ஆண்டுகளாக விலகியே நிற்கிறார். கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், அக்கட்சியின் கடந்த கால நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து தனது ஆதங்கத்தை, தேமுதிக தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்மிடம் மனம் திறந்தார்.

ADVERTISEMENT


"தேமுதிக டபுள் கேம் ஆடுவது புதிது அல்ல. 2014-ல் எல்லா கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்த நேரம். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் விஜயகாந்த். திடீரென கட்சி எம்.எல்.ஏக்களை எல்லாம் அழைத்துக் கொண்டு பிப்.13-ந்தேதி டெல்லி சென்றார். தமிழகத்தின் பிரச்சனைகள் என்று மிகப் பெரிய பைல் ஒன்றை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வழங்கினார் விஜயகாந்த்.

'உங்கள் மாநிலத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா? இதுபற்றி உங்கள் முதல்வர்(ஜெ.) எதுவும் என்கிட்ட சொல்லலையே என்று ஆச்சரியப்பட்ட பிரதமர், முடிந்தவரைக்கும் தீர்வு காண முயற்சிக்கிறேன்' என்றார்.

இந்த பயணத்தின்போது விஜயகாந்த் உடன் சென்றிருந்த மைத்துனர் சுதீஷ், 2014 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பிஜேபி தரப்பிடம் பேச முயற்சித்தார். இதனால், ராஜ்நாத் சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அகமது பட்டேலை பிரேமலதாவும், சுதீஷூம் சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரஸ் கூட்டணியில் சேர, தேமுதிக தரப்பு வைத்த கோரிக்கைகளை கேட்டு அகமது படேலுக்கு மயக்கம் வந்து விட்டதாம். அந்த அளவுக்கு பெரிய கோரிக்கை பட்டியலை முன்வைத்திருக்கின்றனர்.

"என்னடா இது, நம்மகிட்ட அப்பாய்ன்ட் மென்ட் வாங்கிட்டு, அங்கிட்டு பேசிட்டு இருக்காங்க, இந்த பாலிடிக்சே வினோதமாக இருக்கிறது என்று ஆச்சரியப்பட்ட ராஜ்நாத்சிங், மூவரையும் சந்திக்க விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டார்.

அப்போது, டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி கேள்வி கேட்டபோது தான், மிகவும் ஆக்ரோஷமாக பேசி, கோபத்தின் உச்சிக்கே விஜயகாந்த் சென்றார். இப்போது, அதே மாதிரி அதிமுக, திமுக கூட்டணி என 2 சைடிலும் துண்டு போட்டு வைத்திருந்த தேமுதிக, கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டது என்ற விரக்தியிலே, வெறுப்பு அரசியலை பத்திரிக்கையாளர்கள் மீது அள்ளி தெளித்திருக்கிறது.

அரசியலில் கொஞ்ச முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும். 2005-ல் உருவான தேமுதிக, இப்போது வரை அனைத்து தேர்தலையும் சந்தித்து வந்திருக்கிறது. எனினும், 2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கூட்டணிகளையும் எதிர்த்து 39 தொகுதிகளில் தே.மு.தி.க. தனித்து நின்றது. பெரும்பாலான தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள், கணிசமான வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். 31.26 லட்சம் ஓட்டுகள் வாங்கி 10.08 சதவிகிதம் வாக்குகளைக் கைப்பற்றியது தேமுதிக. அதாவது அந்த தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்கு 10.1 சதவீதம். 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது.

பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், ஏ.கே.மூர்த்தி, தங்கபாலு, தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான் போன்றோர் அப்போது நாடாளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததில் தேமுதிகவின் பங்கு அதிகம்.

விருதுநகரில் போட்டியிட்ட வைகோ, வெறும் 15 ஆயிரத்து 764 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார். ஆனால், அந்த தேர்தலில் அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 229 வாக்குகள் பெற்றார்.

ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் தேமுதிகவின் வாக்கு வங்கி வெகுவாக சரிந்துவிட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு (பிஜேபி கூட்டணியுடன் நின்று) 5.2 சதவீத வாக்கு கிடைத்தது. அதற்கு பிறகு நடைபெற்ற 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெற்றது வெறும் 2.4 சதவீதம் மட்டுமே. (அதுவும் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து நின்றது)

இப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை நிலையில் தேமுதிக இருப்பதால், எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்ற நிலைப்பாட்டை அதிமுகவும், திமுகவும் எடுத்துவிட்டது. எங்களிடம் சீட் இல்லை என்பதை நாகரீகமாகவே சொல்லிவிட்டார் துரைமுருகன். கூட்டணியில் சேர்வதும், சேராததும் அவர்களது விருப்பம் என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், இன்னும் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதை போல், வெறுப்பு அரசியலை பத்திரிக்கையாளர்கள் மீது வெளிப்படுத்தி வருகிறார் பிரேமலதா.

அண்ணியாரிடம் கண்ணாடி முன் நின்று பார்க்கச் சொல்லுங்கள் கட்சிக்காரர்களே! இது 2009 தேர்தல் அல்ல. 2019-ல் நடக்கின்ற தேர்தல் என்று!" எனச் சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார்.

கண்களை மூடிக்கொண்டு, உலகம் இருட்டாக இருக்கிறது என்று நினைத்ததாம் பூனை! அப்படி ஒரு நிலையில தான் இருக்கிறார்கள் அக்கட்சியை தங்கள் இஷ்டத்துக்கு வழி நடத்திச் செல்பவர்கள்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT