ADVERTISEMENT

சிவகாசியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி... காவல்துறையினர் தீவிர விசாரணை!

12:33 PM Jan 21, 2020 | santhoshb@nakk…

போக்சோ சட்டம், குழந்தைகள் பாலியல் வீடியோ மற்றும் போட்டோக்களை இணையத்தில் பார்த்தாலோ, செல்போனில் வைத்திருந்தாலோ கைது நடவடிக்கை என, குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில், சட்டத்தின் மூலம் கெடுபிடிகள் தொடர்ந்தாலும், குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. சிவகாசியிலும் அப்படி ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

சிவகாசி அருகிலுள்ள கொங்கலாபுரத்தில் வசிக்கிறார் சுந்தரம். இவரது மகள் பிருத்திகா, அதே கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று (20.01.2020) மாலை அவள் காணாமல் போய்விட்டாள். உடனே, சுந்தரம் சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிருத்திகா தேடப்பட்டபோது, கொங்கலாபுரம் காட்டுப் பகுதியில், வாயில் பஞ்சால் அடைக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருக்கிறாள்.

ADVERTISEMENT


8 வயது சிறுமி பிருத்திகா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பாளோ என்ற கோணத்தில் சிவகாசி டவுண் காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நடந்த இக்கொடூரத்தை அறிந்த ஆனையூர் பகுதியில் வசிக்கும் மக்கள் கொதித்துப் போய் உள்ளதாகக் கூறிய அந்த ஏரியாக்காரர் “சிவகாசியில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கிறார்கள். இங்கே இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில், கஞ்சா புகைப்பவர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. எந்நேரமும் கஞ்சா போதையிலேயே இருக்கும் இரண்டு இளைஞர்கள் சிறுமிகளைத் தூக்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போக, ஒருகட்டத்தில் மக்களே அவர்களைத் தேடிபிடித்து அடித்து உதைத்தார்கள். காவல் நிலையம் வரை விவகாரம் சென்றது. அப்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜராஜனிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. ஒருவனைக் கைது செய்து, இன்னொருவனை விட்டுவிட்டார்கள்.

அப்போதே, இருவர் மீதும் மிகக்கடுமையாக நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்திருக்காது. கொங்கலாபுரத்தில் சிறுமியைக் கொலை செய்தவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதேநேரத்தில், கஞ்சா விற்பதைத் தடுக்காத வரையிலும், கஞ்சா புகைப்பவர்களின் நடமாட்டம் இருக்கத்தான் செய்யும். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, சட்ட ரீதியான நடவடிக்கையை காவல்துறையினர் உடனே மேற்கொள்ளவேண்டும்.” என்று பொது நன்மை கருதிப் பேசினார்.

விருதுநகர் மாவட்ட காவல்துறை இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT