Skip to main content

சிவகாசியில் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்!- ஏவியது ராஜேந்திரபாலாஜியா? ராஜவர்மனா?

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

    குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி சிவகாசி பெல் ஹோட்டல் முன்பாக மர்ம நபரால் தாக்கப்பட்டார். கைலியும் கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்த அந்த மர்ம ஆசாமி தாடியும் வளர்த்திருந்தான். கூட்டாளிகள் சிலர் தள்ளி நிற்க, அவன் மட்டும் ‘ஏன்டா நியூஸா போடுற?’ என்று கார்த்தியின் பின்னந்தலையில் இரும்பு ராடால் ஓங்கி அடித்தான். அரிவாளால் முகத்திலும் வாயிலும் மாறி மாறி வெட்டினான். அவனது தொடர் தாக்குதலில் இருந்து தப்பி ரத்தம் சொட்டச் சொட்ட ஓடினார், கார்த்தி. தற்போது சிவகாசியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த நிலையிலும், தன் மீதான தாக்குதலை சைகை மூலம் நமக்கு விளக்கினார்.   

sivakasi reporter incident police investigation

 

கார்த்தி மீது ஏன் இந்தக் கொலைவெறித் தாக்குதல்?

தாக்குதல் நடந்த 3-ஆம் தேதி வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘ராஜேந்திரபாலாஜியை வீழ்த்துவாரா ராஜவர்மன்?‘ என்னும் தலைப்பில் கார்த்தி எழுதிய கட்டுரை பிரசுரமாகி இருந்தது. அதில், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக, அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் வாள் சுழற்றுகிறார் என, ஜாதி அரசியலைத் தொட்டு, பின்னணியில் இருப்பது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்றும், கான்ட்ராக்ட், கமிஷன் விவகாரங்களில் இன்டர்மீடியேட்டராகச் செயல்பட்டதால் ராஜவர்மனின் வசதி வாய்ப்புகள் கூடிவிட்டது என்றும், களப்பணிகளிலோ, கட்சி நடத்திய போராட்டங்களிலோ கலந்துகொள்ளாத ராஜவர்மன் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்றும் விவரிக்கப்பட்டிருந்தது.

 

 

 

கட்சி நிர்வாகிகளை மிரட்ட துப்பாக்கியைக் கையில் எடுத்தார்; வெற்றுச்சவடால் பேச்சால் அதிமுகவை அழிக்கிறார்; ஆணவமாகப் பேசுகிறார்; ஆபாசமாகத் திட்டுகிறார்; ராஜவர்மனை சமாளிக்க முடியாமல் திணறுகிறார் என்று ராஜேந்திரபாலாஜியின் மைனஸ்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.  மேலும், அமைச்சரை சுற்றியிருப்பவர்கள் ராஜவர்மன் விசிறியடிக்கும் பணத்துக்கு விலைபோய் விட்டார்கள் என்று சிலரது பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.

sivakasi reporter incident police investigation

ஆர்.பி.உதயகுமார் மட்டுமல்ல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி போன்றோரும் ராஜவர்மனின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூட, ராஜவர்மன் மூலம் ராஜேந்திரபாலாஜிக்கு செக் வைக்கிறார் என்றும் அக்கட்சியின் முன்னணி தலைவர்களின் பெயர்களும் அச்செய்தியில் அடிபட்டன.

இந்தக் கட்டுரையால் யார் யார் எரிச்சல் அடைந்திருப்பார்கள் என்று பார்த்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பேர் மீதுமே சந்தேகம் எழும். தாக்குவதற்கு ஆட்களை ஏவியவர் யாராக இருக்கும் என்று அந்த வட்டத்தைச் சுருக்கிப் பார்த்தால், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மன் எம்.எல்.ஏ., ஆகிய இருவர் மட்டுமே தெரிகின்றனர்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை தொடர்பு கொண்டோம். “நான் நிருபர் கார்த்தியிடம் செய்தி குறித்து பேசினேன். தன்னிடம் சில ஆதாரங்கள் உள்ளதாகவும், நானே சென்னை வந்து நேரில் தருகிறேன் என்றும் கூறினார். கேள்விப்பட்ட தகவல்களை விசாரித்து எழுதுவதுதான் பத்திரிக்கையாளரின் பணி. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். இதற்காக, நான் ஏன் கோபப்பட வேண்டும்? அந்த மர்ம நபர்,  முதலில் நிருபரிடம் செல்போனில் பேசிவிட்டு, பிறகு நேரில் வந்து தாக்கியதாகச் சொல்கிறார்கள். நிருபர் தாக்கப்பட்ட இடம் மெயின் ரோடு என்கிறார்கள். இந்த டெக்னாலஜி காலத்தில், காவல்துறையால் குற்றவாளியை சுலபமாகப் பிடித்துவிட முடியும். யாருக்காக, என்ன காரணத்துக்காக தாக்கினான் என்பது, அவன் பிடிபட்டால் தெரிந்துவிடப் போகிறது,” என்றார் கூலாக.

sivakasi reporter incident police investigation

சாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜவர்மனோ “நான் ஒரு காந்தியவாதி. என்னை விமர்சித்து  இதற்குமுன்பும் எத்தனையோ செய்திகள் வந்திருக்கின்றன. நான் எதுவும் செய்தேனா? இதுபோன்ற செய்திகளையெல்லாம் நான் கண்டுகொள்வதே இல்லை.குடும்பத்தோடு திருச்செந்தூருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

நள்ளிரவு கடந்தும் காவல்துறை அதிகாரிகள் மாறி மாறி கார்த்தியை விசாரித்து வருகின்றனர். ‘என்ன பேசினாலும் சர்ச்சையாகி விடுகிறது’ என்பதை உணர்ந்தோ என்னவோ, மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மேடையில் வரவேற்புரை நிகழ்த்தியபோது, முதல்வர் எடப்பாடி முன், அடக்கியே வாசித்தார், ராஜேந்திரபாலாஜி. செய்தி வெளிவந்த அன்றே, இத்தனை அவசரமாக, பத்திரிக்கையாளர் ஏன் தாக்கப்பட வேண்டும்? இதன் பின்னணியில் ராஜேந்திரபாலாஜி எப்படி இருப்பார்? என்ற கோணத்திலும், அதிரடியாகப் பேச மட்டுமல்ல, நடக்கவும் செய்வார் ராஜேந்திரபாலாஜி. தன்னைச் சுற்றி முரட்டுத்தனமான பக்தர்களை வைத்திருக்கிறார். அவர்களில் யாரேனும் விசுவாசத்தைக் காட்டுவதற்காக இதைச் செய்திருக்கக்கூடும் என்ற கோணத்திலும், நிருபர் கார்த்தியை யார் தாக்கினாலும், அது அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தலையில்தான் விடியும் என்ற திட்டத்தோடு, ராஜவர்மனே இந்தக் காரியத்தை யார் மூலமோ செய்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும், தமிழகத்தில் அமைச்சர்கள் யாருக்கும் கிடைக்காத விளம்பரம், பேட்டி அளிக்கும்போதெல்லாம் ராஜேந்திரபாலாஜிக்கு கிடைத்துவிடுகிறதே என்ற பொறாமையில், அவரைச் சிக்க வைப்பதற்காக, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள், ராஜவர்மனைக் கையில் எடுத்து, இதைச் செய்திருக்கக்கூடும் என்ற கோணத்திலும் பலவாறாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

“என்னுடைய போனிலிருந்து நான் பேசவில்லை. என் பெயர் ஆரோக்கியம். கே.டி.ஆருக்கு எதிராக ஒரு ஆவணம் இருக்கிறது.” என்று ஒருவன் போனில் பேசியதாகவும், அதன் பிறகே தான் தாக்கப்பட்டதாகவும் எழுதிக் காண்பித்தார் கார்த்தி. தாக்க வருபவன், உண்மையான பெயரை போனில் சொல்லிவிட்டா வருவான்? நியூஸ் வெளியிட்டதற்காகத்தான் உன்னை அடிக்கிறோம் என்று காரணத்தைக் கூறிவிட்டா அடிப்பான்?  எங்கோ இடிக்கிறது அல்லவா?

“கால் லிஸ்ட், சிசிடிவி ஃபுட்டேஜ் என அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். குற்றவாளி தப்பவே முடியாது.” என்று அடித்துச் சொல்கிறார்கள், காவல்துறையினர்.

 

  

  

  

 

சார்ந்த செய்திகள்