ADVERTISEMENT

மணல் குவாரியை முற்றுகையிட்டு மாட்டுவண்டித் தொழிலாளர்கள் போராட்டம்!

07:46 PM Aug 13, 2020 | rajavel

ADVERTISEMENT


புதிதாக அமைக்கப்படவிருந்த அரசு மணல் குவாரியை மாட்டு வண்டித் தொழிலாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் மற்றும் கோபாலபுரம் கிராமங்களின் பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதியுடன், மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையத்தின் மூலம் 4.87 ஹெக்டேர் பரப்பளவில் 48,750 கன மீட்டர் அளவிற்கு மணல் அள்ள ஓர் ஆண்டிற்கு அரசு மணல் குவாரி அனுமதிக்கப்பட்டது.


அதேசமயம் இந்த ஆற்றில் நீர்பாசன திட்டத்திற்காக கடந்த 1865 ஆம் ஆண்டு அனைக்கட்டு கட்டப்பட்டு வடக்கு பாசனத் திட்ட வாய்க்கால் மூலம் 44,400 ஏக்கர் பரப்பளவிலும், தெற்கு பாசன திட்ட வாய்க்கால் மூலம் 31,000 ஏக்கர் பரப்பளவிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த அணைக்கட்டின் அருகே புதிதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு மணல் குவாரி தொடங்கியது. இந்த மணல் குவாரி மூலம் லாரிகளில் மட்டுமே மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மணல் குவாரிக்கு அனுமதி அளித்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும், விவசாயம் பாதிக்கும் என்று கூறி பா.ம.க. மற்றும் கிராம மக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் தற்காலிகமாக மணல்குவாரி மூடப்பட்டது.

இந்நிலையில் மாட்டுவண்டி மணல்குவாரி அமைக்கப்படாததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 3 ஆண்டுகளாக மாட்டுவண்டித் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் புதிய மணல் குவாரியில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள அனுமதிக்கக் கோரி அனைத்து கிராம மாட்டுவண்டித் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் மாட்டு வண்டிகளுடன், அரசு மணல் குவாரியை முற்றுகையிட்டனர்.

அதையடுத்து தகவலறிந்து விரைந்து சென்ற விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் டைமன் துரை மற்றும் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாட்டுவண்டித் தொழிலாளர்களைச் சமாதானப்படுத்தினர்.

அப்போது குமாரமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்காக அரசு மணல் குவாரி அமைக்க அளவீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது லாரிகளுக்கு மட்டுமே மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டுவண்டித் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். அதனால் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் அரசு மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் மணல் குவாரிகளில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மணல் குவாரி முன்பு மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்கக் கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் மாட்டுவண்டித் தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT