ADVERTISEMENT

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; விருத்தாசலம் பள்ளிக்கு சீல்

12:50 PM May 03, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் இருந்து வந்தார். இவர் வசிக்கும் பகுதியில், அவருக்கு சொந்தமான பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்று வந்த ஆறு வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், விருத்தாசலம் மகளிர் போலீசார் பக்கிரிசாமியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பக்கிரிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அவர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து கடந்த மாதம் 12ம் தேதி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு பக்கிரிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி, விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனேயே அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்து நிரந்தரமாகவும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (2ம் தேதி) தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார். பின் அந்தப் பள்ளிக்கு சீல் வைக்கும்படி ஆனந்த் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆனந்த், “இந்தப் பள்ளிக்கான உரிமம் கடந்த 2014ம் ஆண்டுடன் முடிவடைந்துள்ளது. பள்ளியில் உள்ள ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆதாரங்களைப் பாதுகாப்பதற்காக பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் படித்துவந்த 101 மாணவர்களை அவர்கள் விரும்பும் வேறு பள்ளிகளுக்கு மாறுதல் செய்யவும், அவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் மாற்றுச் சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT