ADVERTISEMENT

பெண்களைக் கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த கும்பல்! 

02:56 PM Dec 08, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கண்டப்பன் சாவடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் தஷ்ணமூர்த்தி, இவரது மனைவி 80 வயது சரோஜா, இவரது மகள் 60 வயது பூங்காவனம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனத்தை அம்மணங்குப்பம் என்ற கிராமத்தில் தங்கவேலு என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்தனர். அவர்களுக்குத் தற்போது 29 வயதில் வள்ளி என்ற மகள் உள்ளார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகள் வள்ளியுடன் பூங்காவனம் தனது தாய் சரோஜா உடன் வசித்துவருகிறார்.

நேற்று முன்தினம் (06.12.2021) வள்ளி மட்டும் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றதால் சரோஜா, பூங்காவனம் ஆகிய இருவரும் அன்று இரவு வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து, சரோஜா வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கே சரோஜாவும் அவரது மகள் பூங்காவனமும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அதுகுறித்து கண்டமங்கலம் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அத்தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் சரோஜா வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், தாய், மகள் இருவரையும் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அதலிருந்து தப்பிக்க அவர்கள் போராடியுள்ளனர். இதனால் அவர்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், கம்மல் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதேபோன்று அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்துகொண்டிருந்தபோது அங்குள்ள செங்கல் சூளையில் கல்லிறக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த நாகலிங்கம், அவரது மனைவி அம்சம்மாள் ஆகிய இருவரும் அங்குள்ள குடிசையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தனர். அந்தக் குடிசைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்சம்மாளை வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அவர் கத்திக் கூச்சல் போட்டதும் மர்ம நபர்கள் அவரை பலமாக தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அம்சம்மாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்துவருகின்றனர். அதேபோல், இப்பகுதியில் உள்ள கலித்திறம் பட்டு, வம்பு பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள அம்மன் கோவில், அய்யனார் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள உண்டியலை உடைத்து, கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவமும் நடந்துள்ளது. இதனையும் அதே குழுவைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், தனிப்படை போலீசார் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் 30 வயது கவிதாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து கொலை செய்யப்பட்ட சரோஜா, பூங்காவனம் ஆகியோர் அணிந்திருந்த நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். இவர் அந்தப் பெண்களைக் கொலை செய்த கொலையாளி என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT