ADVERTISEMENT

மகனிடமிருந்து காப்பாற்றுங்கள்.. ஆட்சியர் அலுவலகத்தில் கையை அறுத்துக்கொண்ட முதியவர்..!

12:51 PM Dec 31, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது சித்தாம்பூண்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள் (60). இவர், நேற்று (30.12.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர், தன் கையை ப்ளேடால் அறுத்துக்கொண்டு “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அலறியுள்ளார்.


அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், அதைப் பார்த்துவிட்டு அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது பெருமாள், “எனக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன், மருமகள் இருவரும் இறந்துவிட்டனர். தற்போது, இளைய மகன் சிலம்பரசனுடன் வாழ்ந்து வருகிறேன். சிலம்பரசன், தினமும் என்னை அடித்து உதைத்து சித்திரவதை செய்து வருகிறார்.


எனக்கு வேறு யாரும் உதவி செய்ய மறுக்கின்றனர். இது குறித்து எனது உறவினர்களிடம் கூறினாலும், யாரும் முன்வந்து என் இளைய மகனிடம் தட்டிக் கேட்க மறுக்கிறார்கள். இதனால் மனமுடைந்த நான், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், செஞ்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். விவசாயி பெருமாளின் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT