/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_134.jpg)
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ளது திருச்சிற்றம்பலம் கூட்ரோடு. இங்குள்ள இந்தியன் வங்கியின் அருகில் வசித்து வருபவர் 73 வயது பாலசுப்பிரமணியன். இவர் தனியாருக்குச் சொந்தமான சுகாதார நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் நேற்று மதியம் தன் வீட்டுக்கு அருகிலுள்ள இந்தியன் வங்கிக்குச் சென்று தனது கணக்கில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். அந்தப் பணத்தை ஒரு துணிப்பையில் வைத்து எடுத்துக்கொண்டு வங்கியின் எதிர்ப்புறம் உள்ள தனது வீட்டுக்குச் சாலையைக் கடந்து, சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்தனர், பாலசுப்பிரமணியன் அருகே பைக்கை மெதுவாக ஓட்டிக்கொண்டு சென்றபடியே, அவர் கையில் வைத்திருந்த பணப் பையை மின்னல் வேகத்தில் பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்றுவிட்டனர். பணத்தைப் பறிகொடுத்த பெரியவர் பாலசுப்பிரமணியம், பெருங்குரலில் கத்தி, சத்தம் போட்டுள்ளார். அதற்குள் பணம் பறித்த மர்ம நபர்கள் அந்த பைக்கிலேயே பறந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து, பெரியவர் பாலசுப்பிரமணியம், ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு கோட்டகுப்பம் டி.எஸ்.பிஅஜய் தங்கம், நேரில் சென்று விசாரணை செய்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதே போன்று இந்த வங்கியில் வரவு செலவு கணக்கு வைத்துள்ள நபர்கள் அடிக்கடி வங்கிக்குச் சென்று பணம் எடுப்பதையும் பணம் செலுத்துவதையும் நோட்டமிட்டு கண்காணித்து இதேபோன்று வழிப்பறி செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பதட்டத்தில் உள்ளனர். மாவட்டத்தில் கொள்ளையர்கள் பல்வேறு விதமான முறைகளில் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகிறார்கள். முதியவர்களின் கவனத்தைத் திசை மாற்றி கொள்ளையடிக்கும் கும்பல் சுற்றி வருகிறது. பொதுமக்கள் முதியோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்கிறார்கள் காவல்துறையினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)