ADVERTISEMENT

மருத்துவமனையில் செவிலியருக்கு கத்திக்குத்து; காதல் கணவர் கொடூரம்

01:09 PM May 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

கோப்பு படம்

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரணி என்பவர் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் விக்கிரவாண்டி அருகே உள்ள ஈஞ்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமாரும் காதலித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது பரணி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அது சம்பந்தமான வழக்கு நடப்பதாகவும் தெரிகிறது. கணவன் மனைவி ஒன்றாக இருக்கும்போது பரணியின் நகைகளை வாங்கி சரத்குமார் விற்று செலவு செய்துள்ளார் இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் கோபித்துக் கொண்டு பரணி விழுப்புரத்தில் உள்ள தனது தந்தை தேசிங்கு வீட்டிற்கு வந்து வசித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சரத்குமார் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஏற்கனவே பிரச்சனையில் இருக்கும் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சரத்குமார் பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். சரத்குமார் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமார் பூச்சி மருந்து சாப்பிட்ட நான் இனிமேல் பிழைக்க மாட்டேன். கடைசியாக என் மனைவியின் முகத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த செவிலியர்களிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார். சக செவிலியர்கள் இது குறித்து பரணியிடம் கூறியுள்ளனர். கணவன் உயிருக்கு போராடுவதாகக் கூறியதைக் கேட்டு கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரை பார்ப்பதற்கு அவர் இருக்கும் மருத்துவமனை வார்டு பகுதிக்கு சென்றுள்ளார் பரணி. அப்போது சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரணி தலையில் சரமாரியாக பல இடங்களில் குத்தியுள்ளார். இதில் பரணிக்கு தலையில் பல இடங்களில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டது. இதனை நேரில் கண்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களில் சிலர் சரத்குமாரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். தலையில் கத்திக்குத்து காயம்பட்ட பரணியை சக செவிலியர்கள் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனை வளாகத்தில் மனைவி மீது கத்திக்குத்து நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT