ADVERTISEMENT

வெள்ளாற்றில் வெள்ளம்! தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால் 20 கிராம மக்கள் பாதிப்பு!

04:31 PM Aug 10, 2020 | kalaimohan


கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இடையே வெள்ளாற்று கரையோரம் பெண்ணாடம், செம்பேரி, சௌந்தர சோழபுரம், முருகன்குடி, பெரிய கொசப்பள்ளம் , துறையூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, கோட்டைக்காடு, ஆலத்தியூர், சித்தேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி செம்பேரி - பெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூபாய் 30 கோடியில் 2018-ஆம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆனைவாரி, உப்பு ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளாற்றில் கலந்தது. இதனால் தடுப்பணையில் 5 அடி வரை மழை நீர் தேங்கியதால் இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT



இதனிடையே செம்பேரி - சித்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிகமாக போடப்பட்ட செம்மண் சாலை தொடர் மழையினால் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தற்காலிக மண் சாலை அரிப்பெடுத்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, முதுகுளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் போன்ற பகுதிகளுக்குச் சென்று வந்த கடலூர் மாவட்டம் செம்பேரி, சௌந்தரசோழபுரம், பெண்ணாடம், வடகரை நந்திமங்கல உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இப்பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளாற்றை கடக்க முருகன்குடி மேம்பாலம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரமும், பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரமும் சுற்றிக்கொண்டு பெண்ணாடம், திட்டக்குடி, செந்துறை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும், பின்னர் அதைச் சீரமைத்து போக்குவரத்துக்கு பயன்படுத்துவதும் வழக்கமாக உள்ளது. எனவே இந்த தரைப் பாலத்தை மேம்பாலமாக அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT