ADVERTISEMENT

புவனகிரிக்கு வரும் குடியரசு துணைத் தலைவர்; மீண்டும் ஒரு சர்ச்சை

07:45 PM Jan 28, 2024 | kalaimohan


இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திங்கட்கிழமை அன்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் நடராஜர் கோவில், பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோயில், புவனகிரியில் உள்ள எல்லையம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வழிபாடு செய்கிறார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் புவனகிரியில் உள்ள எல்லையம்மன் கோவில் பொது கோவிலாகும் இதனை பாஜக பிரமுகரான சீனிவாசன் என்பவர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வர்மக்கலை சித்த மருத்துவம் உள்ளிட்ட வைத்திய முறைகளை செய்து வருகிறார். இவரிடம் பிஜேபி பிரமுகர்கள் பலர் இங்கு வந்து ரகசியமாக சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் இந்திய குடியரசு துணைத் தலைவர் இந்த கோவிலுக்கு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் கூறுகையில், ''புவனகிரி நகருக்கு துணை ஜனாதிபதி வருகை என்பது வரவேற்கத்தக்கது. பெருமைக்குரியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் இந்த கோவிலில் பொதுமக்களை வழிபட விடாமல் தடுப்பதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கோவிலை ஒட்டியுள்ள 1.25 ஏக்கர் நிலத்தை இவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார் என்றும், இந்த கோவிலை உள்ளே யாரும் வழிபட அனுமதிப்பதில்லை என்பதால் சிதம்பரம் சப் கோர்ட்டில் வழக்கு எண் 14 /2020 வழக்கு உள்ளது. வரும் பிப்ரவரி 13ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. துணை ஜனாதிபதி வணங்க வரும் எல்லையம்மன் ஆலயம் ஒருநாளும் பொதுமக்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எல்லையம்மன் ஆலயம் உள்ள சொத்தின் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் துணை ஜனாதிபதி வருகை என்பது நீதியை நிலை நாட்ட முடியுமா? நீதியை மூடி மறைக்க உதவுமா? என்பதில் சந்தேகம் எழுகிறது. பொதுமக்கள் தெய்வ வழிபாடு செய்ய முடியாத ஆலயம்! பாமரன் நுழைய முடியாத ஆலயத்திற்கு ஒரு வார காலமாக அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் வேலை செய்வதும் அதற்காக அரசின் பணம் செலவிடப்படுவதும், அரசு ஊழியர்களையும் காவலர்களையும் இரவு முழுக்க தூக்கம் இன்றி வேலை வாங்குவதும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசிற்கும் அழகல்ல.

புவனகிரி பகுதியில் மக்கள் குறைகளும் கோரிக்கைகளும் பல இருந்தும் அந்த குறைகளை தீர்க்க நிதி இல்லை என சொல்லும் பேரூராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகள் தனிநபரின் ஆக்கிரமிப்பு இடத்திற்கு லட்சக்கணக்கில் செலவிடுவது நியாயமா? துணை ஜனாதிபதியின் பாதுகாப்பு என்பது முக்கியமானது அதேபோல் சாமானிய மனிதனின் உயிரும் முக்கியமானது. புவனகிரி நகரில் விபத்துகளை தடுக்க போடப்பட்ட வேகத்தடைகள் அனைத்தும் உடைத்தெறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இடைப்பட்ட காலங்களில் விபத்துகள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது. இந்த ஆலயத்திற்கு துணை ஜனாதிபதி வருவதன் மூலம் தனிநபர் வழிபடும் ஆலயம் அரசுடமை ஆக்கப்பட்டு பாமரனும் வணங்கிட வழி பிறக்குமா? அரசு செய்த செலவிற்கும் பணிகளுக்கும் பலன் கிடைக்குமா' எனக் கூறினார். இதனால் புவனகிரிக்கு குடியரசு துணைத் தலைவர் வருகைக்கு எதிராக சமூக வலைதளத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT