ADVERTISEMENT

மோடி, அமித்ஷாவிடம் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல் 

03:02 PM Sep 15, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தி தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நமது கலாச்சாரத்தையும் வரலாற்றின் ஆன்மாவையும் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்தி தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியில் அமித்ஷா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவின் அலுவல் மொழியான இந்தி, நாட்டை ஒன்றிணைக்கும்’ என தெரிவித்திருந்தார். அதாவது, இந்தி தான் நாட்டை ஒன்றிணைக்கும் என்பது அமித்ஷாவின் வாதம்.

இந்தியை எப்படியாவது திணித்துவிடலாம் என முயற்சிக்கும் மோடிக்கும், அமித்ஷாவுக்கும், 'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' எனும் பொருளை மையப்படுத்தி மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அந்த உரையில், 'ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம். இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது.

இந்தியா 'கூட்டாட்சி நாடு'; இந்தியச் சமூகம் பன்மைத்துவம் கொண்டது. ஆகையால் ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக ஏற்பது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பது போன்றதாகிவிடும்' என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்தியா ஒரே நாடல்ல. இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும் மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு. இதனாலேயே இந்தியாவை 'துணை கண்டம்' என்று அழைக்கிறோம். இதனால்தான், ஒரே மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக நம்மால் ஏற்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. எங்கள் உயிருடன், வாழ்வுடன் கலந்த மொழி தமிழ் மொழி, அந்த தமிழ் மொழி மற்ற எதற்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி தரப்படும்வரை நான் அமைதி பெறமாட்டேன், திருப்தி அடைய மாட்டேன் என்றும் பேரறிஞர் அண்ணா உறுதிபட தெரிவித்துள்ளார்.

மோடி அவ்வப்போது தமிழ் மொழியின் பெருமிதம் பேசுவதும், திருக்குறள் பாடுவதும், நண்பர்கள் போன்று, தமிழர்கள் தோள் மீது கை வைத்து பேசுவது எல்லாமே, மெதுவாக தமிழர்களை கழுத்தை இறுக்குவதற்காகத்தான். மோடியும், அமித்ஷாவும் தமிழர்களுக்கு என்றுமே எதிரி தான். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோடியும், அமித்ஷாவும் தமிழ் மொழியின் புகழை பாடுவதெல்லாம், நம்மை ஏமாற்றவே; அவர்களின் பேச்சிற்கு நாம் மயங்கிடக்கூடாது. எனவே, ஒன்றிய பாஜக அரசின் உள்நோக்கத்தை அமித்ஷாவின் கருத்தில் இருந்து புரிந்து கொண்டு, தமிழர்கள் எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் வேல்முருகன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT