ADVERTISEMENT

“சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது எதார்த்தமான ஒன்று” - வேளாக்குறிச்சி ஆதீனம்

02:59 PM May 30, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

"செங்கோல் நிறுவப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் சமத்துவமும் நீதியும் நேர்மையும் பிரதிபலிக்க வேண்டும். சாவர்க்கர் பிறந்தநாளில் கட்டடம் திறக்கப்பட்டது எதார்த்தம் என்றே நினைக்கிறேன்” என நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று ஊர் திரும்பிய வேளாக்குறிச்சி ஆதீனம் தெரிவித்துள்ளார்.

திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் என்றழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்றார். இன்று நாகை மாவட்டம் திருப்புகலூர் மடத்திற்கு வந்தவருக்கு மங்கல வாத்தியங்கள் அதிர்வேட்டுகள் முழங்க அவரது பாதங்களுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், உள்ளூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “தமிழ் சைவ ஆதீனங்கள் மூலம் வழங்கப்பட்ட செங்கோல் மீண்டும் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. நீதி, நேர்மை, சமத்துவத்தின் குறியீடாக செங்கோல் பார்க்கப்படுகிறது. நல்லாட்சி புரிவதற்கு முன்பாக அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டது. புதிதாக செங்கோல் வழங்கப்படவில்லை. பண்டித ஜவஹர்லால் நேரு காலத்தில், திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்டு அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் புதுப்பிக்கப்பட்டு தற்போது மக்களவையில் நிறுவப்பட்டு இருக்கிறது என்றால், ஆட்சியாளர்கள் நேர்மையாகச் செயல்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். எந்தவித பேதமும் இன்றி சமத்துவமும் நீதியும் நேர்மையும் மக்களவையில் பிரதிபலிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அந்த செங்கோல் நிறுவப்பட்டதாக கருதுகிறேன். செங்கோல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குறை காணுவதை விட அதன் பின்னால் உள்ள தத்துவத்தை உணர வேண்டும். சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது எதார்த்தமான ஒன்றாக இருக்கலாம். திட்டமிட்டு பிரதமர் செய்திருப்பார் என்று முடிவெடுக்க முடியாது." என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT