ADVERTISEMENT

மறு தேர்தலில் வென்ற விசிக!

09:10 PM Feb 24, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19 ம் தேதி நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 78 பேர் போட்டியிட்டனர். கடந்த 19ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 1,170 வாக்காளர்களைக் கொண்ட 4-வது வார்டில் 827 வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும், அன்று இரவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குக் கொண்டு சென்று ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

கடந்த 22ம் தேதி புவனகிரி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது 4-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானது. பின்னர் பெல் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சரிபார்த்தும், அதனை சரி செய்ய முடியவில்லை. இதனால் 4-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இந்த வார்டுக்கான மறுதேர்தல் 24ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வியாழன் அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் 813 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும், அதே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் 622 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலருமான அருள்குமார் அறிவித்தார். புவனகிரி பேரூராட்சியைப் பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT