ADVERTISEMENT

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்; திருமாவளவன்

09:01 PM May 08, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் போக்கு சந்தேகம் அளிப்பதாக உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்துக்கு வேறு ஒரு அதிகாரியை பொறுப்பாளராக நியமிக்க வேண்டுமென இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத் துகிறோம்.

ADVERTISEMENT

சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ரகசியமாக கோவையிலிருந்து 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது 13 மாவட்டங்களில் 46 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும். அவற்றில் மறுவாக்குப் பதிவு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அதற்காகத் தான் அந்த இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன எனவும் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. அரசியல் கட்சிகள் எதுவும் கோராமல், வாக்குப் பதிவு குறித்து புகார் ஏதும் அளிக்கப்படாமல் மறுவாக்குப் பதிவு எப்படி நடத்தப்படும் என்பது புதிராக உள்ளது.

தர்மபுரி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் பத்து வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்து சுமார் இரண்டு வாரமான பின்பும் அது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் எந்த ஒரு முடிவுமெடுக்கவில்லை. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கலவரம் நிகழ்த்தப்பட்ட பொன்பரப்பி வாக்குசாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்று சுமார் நூறு வாக்காளர்களின் கோரிக்கைகளோடு மனு அளித்தும் அதை தலைமை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். இந்த நிலையில் எந்தவொரு அரசியல் கட்சியும் புகாரோ கோரிக்கையோ முன்வைக்காமல் தன்னிச்சையாக 46 வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்திருக்கிறது என தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுவது வியப்பளிக்கிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக முறைகேடுகள் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள முக்கியமான 21 அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கும் சூழலில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைகள் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்குமா என்ற அய்யத்தை நமக்கு எழுப்பியுள்ளது. எனவே, தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டுமென்றால் தற்போது தலைமை தேர்தல் அதிகாரிக்குப் பதிலாக வேறு ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT