ADVERTISEMENT

ஆன்லைன் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்! - தமிழக தேர்தல் ஆணையர்!

06:58 PM Jan 30, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


தேர்தல் பயிற்சி வகுப்பு நிறைவடைந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களைச் சந்தித்த தமிழகத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “234 தொகுதிகளில் 116 தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. மீதம் இருக்கக்கூடிய 118 பேருக்கான பயிற்சி திருச்சியில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேசிய அளவிலான திறமை வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதில், பயிற்சிபெற்ற ஒவ்வொருவருக்கும் சட்ட விதிமுறைகள் குறித்தும் வழக்குகளைக் கையாள்வது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் மத்திய மாநில அரசுகளைச் சேர்ந்த அலுவலர்கள் பயன்படுத்தப்படுவதால் அதற்கான பட்டியலை விரைவில் தயாரிக்க உள்ளோம்.

வந்திருக்கக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், 26 மையங்களில் முதல் நிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள எல்லா வாக்குப்பதிவு இயந்திரங்களும் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் சோதனை செய்யப்படும். அதன்பின் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்பதைக் கணக்கெடுப்போம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் தேர்தல் பிரச்சாரம் குறித்த நடைமுறைகளும் விதிமுறைகளும் செயல்படுத்தப்படும். கட்சிகள் வழங்கக்கூடிய தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் ஆணையம் மிகக் கவனமாகக் கண்காணிக்கும்.

பிரச்சாரம் தொடர்பாக வரக்கூடிய புகார்களைத் தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம். ஆன்லைன் மூலம் பணப் பட்டுவாடா செய்வது குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக, நாங்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளையும், பல்வேறு துறைகளையும் இணைத்து ஒரு கூட்டம் நடத்தி இருக்கிறோம். முடிந்தவரை பணப் பட்டுவாடாவை அவர்களின் மூலம் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க ஆன்லைன் மூலம் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிகளும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளனர். அதன்படி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.

வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைபாடுகளைச் சரிசெய்து பெருமளவில் குறை இல்லாமல் அனைவரும் வாக்களிக்க முயற்சி எடுத்து வருகிறோம். மத்திய மாநில அளவில் உள்ள கட்சிகள் என்று பார்த்தால், பத்து கட்சிகள் மட்டுமே இருக்கும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றால் பட்டியல் பெரிய அளவில் இருக்கும். கரோனா காலத்தில் என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே விதிமுறைகளை இந்தத் தேர்தல் நடக்கும் நாட்களிலும் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கண்டிப்பாக முகக் கவசம், கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட எல்லாவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.

சீனியர் சிட்டிசன்கள், முடிந்தவரை வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் வந்து வாக்களிக்கலாம். இயலாமல் இருக்கக்கூடியவர்கள் டி ஃபார்ம் என்று சொல்லக்கூடிய அந்தப் படிவத்தை அதிகாரிகளிடம் பெற்று தபால் மூலம் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்யலாம்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT