ADVERTISEMENT

வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா; ‘டிசம்பர் 28இல் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது’ - ப. சிதம்பரம்

10:54 PM Dec 26, 2023 | prabukumar@nak…

தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா வரும் 28 ஆம் தேதி (28.12.2023) காலை 11.15 மணியளவில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரை வெளியிட்டு உரையாற்றுகிறார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ என்ற நூலை வெளியிட்டு முன்னிலை உரை ஆற்றுகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விழாவில் சிறப்புரையாற்றுகிறார்.

ADVERTISEMENT

இவ்விழாவின்போது செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரித்துள்ள வைக்கம் போராட்டம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் சார்பில் சமத்துவக் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் 28-12-2023 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

ADVERTISEMENT

தந்தை பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே 1936 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 'ஆலயப் பிரவேசப் பிரகடனம்' அறிவிக்கப்பட்டது. தந்தை பெரியாரின் புரட்சிச் சிந்தனைகள், மன உறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 28 டிசம்பர்தான் காங்கிரஸ் மகாசபையின் தொடக்க நாள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வைக்கம் போராட்ட நாள் சென்னையில் கொண்டாடப்படும் அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் பேரணி நாக்பூரில் நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT