ADVERTISEMENT

சிவாஜி பேரவை அதிரடி; ட்விட்டர் பதிவை நீக்கிய வைகைச்செல்வன்

06:44 PM Dec 29, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஓபிஎஸ் கூட்டிய பொதுக்குழுவை நடிகர் திலகம் சிவாஜியோடு ஒப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில் கிண்டலடித்திருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்.அந்தப் பதிவு சிவாஜி ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

இந்த நிலையில், வைகைச்செல்வனை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சந்திரசேகரன். இதனை அடுத்து அவசர அவசரமாக தனது பதிவை நீக்கியுள்ளார் வைகைச்செல்வன்.


இது குறித்து சந்திரசேகரனிடம் நாம் பேசியபோது, “அ.தி.மு.கவில் யார் கூட்டும் பொதுக்குழு பெரியது. எந்தக் கூட்டம் ஒரிஜினல், எந்தக் கூட்டம் டூப்ளிகேட்? ஆட்சியிலிருந்தபோது யார் ஊழல் செய்து அதிகம் சம்பாதித்தது போன்ற சண்டைகள்தான் மீடியாக்கள் மட்டுமின்றி, நீதிமன்றங்கள் வரை சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்பதால் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால், இவர்களின் சச்சரவில் தேவையில்லாமல் நடிகர் திலகம் சிவாஜி பெயரையும் இழுத்திருப்பதுதான் கண்டிக்கத்தக்கதாகும்.

அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் என்பவர் தனது டிவிட்டர் பதிவில், ஈ.பி.எஸ் கூட்டிய கூட்டம் எம்.ஜி.ஆர் படம் போல ஓடக்கூடியது என்றும், ஓ.பி.எஸ் கூட்டிய கூட்டம் சிவாஜி படம்போல ஓடாதது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் சொல்லுகின்ற அந்தக் கூட்டத்தில்தான் யாரோ ஒரு லட்சம் ரூபாயை பிக்பாக்கெட் அடித்துவிட்டார்களாம். இதுதான் இவர்கள் கூட்டிய கூட்டத்தின் லட்சணம்.

நடிகர் திலகம் சிவாஜி திரையுலகில் கோலோச்சிய காலம் மட்டுமல்ல, மறைந்து 21 ஆண்டுகளாகியும் இன்றும் அவருடைய திரைப்படங்கள் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தமிழகம் அறியும். பதவி சுகத்திற்கும், பணம் சம்பாதிப்பதற்கும், தேவைப்படும்போது மட்டும் எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்தும் வைகைச்செல்வன் போன்றவர்களுக்கு வேண்டுமானால் வரலாறு மறந்திருக்கலாம். மறைந்த ஒரு தலைவரைப் பற்றி பேசவேண்டாம் என்று இருந்தாலும், வீணாக இவர்களுடைய குழாயடிச்சண்டையில் நடிகர் திலகத்தை இழுத்தால்., எம்.ஜி.ஆர் பற்றியும் பல விஷயங்களை நாங்களும் பொதுவெளியில் வெளியிடவேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறோம்.

எம்.ஜி.ஆரின் திரையுலக மற்றும் அரசியல் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும் வகையில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய ‘எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்’ என்ற நூலை வைகைச்செல்வன் முதலில் படித்துத் தெரிந்துவிட்டு, அப்புறம் அவருடைய அதிமேதாவித்தன ஒப்பீடுகளைச் செய்தால் நல்லது என்று கடுமையாக எச்சரித்திருந்தேன். எச்சரிக்கையின் உண்மை அவரைச் சுட்டிருக்கும் என நினைக்கிறேன். தற்போது தனது பதிவை நீக்கியிருக்கிறார். இனியாவது மறைந்த தலைவர்களையும், கலைஞர்களையும் பற்றி ஒப்பீடு செய்கிறபோது நாகரிகமாக வைகைச்செல்வன் சிந்தித்துப் பேசவேண்டும்; பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT