ADVERTISEMENT

'சைக்கிள் ஊர்வலம்,பேரணிக்கு அனுமதி கிடையாது'-நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு!

07:03 PM Jan 26, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை இன்று (26/01/2022) தற்பொழுது மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், ''நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. பதிவான வாக்குகள் பிப்.22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜனவரி 28ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. பிப்.4 தேதி மனுதாக்கல் முடிவு பெறுகிறது. பிப்.5 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவைத் திரும்பப்பெற பிப்ரவரி 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல், மனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகளை சிசிடிவி மூலம் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தால் மாவட்ட அலுவலர்களுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

நேரடித் தேர்தல் நடைபெறவுள்ள பதவியிடங்கள்- 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 138 நகராட்சிக்குட்பட்ட 3,843 உறுப்பினர்களும், 490 பேரூராட்சிகளுக்கு 7,621 உறுப்பினர் பதவி இடங்களும் என மொத்தம் 12,738 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், சுகாதார நோய் தடுப்பு மருந்து இயக்கம் ஆகியவை வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளாட்சித் தேர்தலின்போது கடைபிடிக்கப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்கு சைக்கிள் ஊர்வலம், பேரணிக்கு அனுமதி கிடையாது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும். நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் '' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT