ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு போடப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகள்! 

11:50 AM Sep 01, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கரோனா பரவலின் தீவிரம் பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து கரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் முழுவீச்சில் செயல்பட்டன. இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்க கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் மத்திய அரசின் அனுமதியுடன் பொதுமக்களுக்குப் போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் மத்தியில் ஒரு விதமான தயக்கம் இருந்து வந்தது. அதன் பின்பு தமிழக அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக படிப்படியாகத் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் தயக்கத்தால் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அதிகளவில் தடுப்பூசிகள் வீணானது. இந்த வீணான தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல புதிய யுக்திகளைக் கையாண்டது. அதேபோல், பெறப்பட்ட தடுப்பூசிகளை விட அதிகளவில் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது. தமிழக அரசின் இந்த செயல்பாடுகளால், மத்திய அரசு நிர்ணயித்த இலக்கைவிடக் கூடுதலாகத் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு கடந்த ஜூன் மாதம் முதல் அனுப்பி வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தினசரி தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை 5லட்சத்தைக் கடந்துள்ளது. மத்திய அரசும் தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. அதனால் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஆகஸ்டு மாதத்தில் மட்டும் நேற்று முன் தினம் வரை 85 லட்சத்து 91 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும், இதுவரை தமிழகத்தில் மொத்தமாக நேற்று முன் தினம் வரை 2.99 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதில் 2.38 கோடி முதல் தவணை தடுப்பூசியும், 61 லட்சம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் ஆகும். இந்த நிலையில் தமிழகத்துக்குச் செப்டம்பர் மாதம் மட்டும் 1.04 கோடி தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் மாதத்தில் ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசிகளைச் செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT