ADVERTISEMENT

“மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும்” - முதல்வர் பதிலடி

08:22 PM Feb 22, 2024 | prabukumar@nak…

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்று வரை நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும் கடந்த 20 ஆம் தேதி (20.02.2024) 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதே சமயம் பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன.

ADVERTISEMENT

அந்த வகையில் சட்டபேரவையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையில் நூலகம் அமைக்கப்படுவது தொடர்பாக நேற்று (21.02.2024) கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளிக்கையில், “சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாக, விளக்கமாக, விரிவாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய வகையில் அமைந்திருக்கிற காரணத்தால் என்னுடைய வாழ்த்துகளையும் மனதார நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ADVERTISEMENT

நேற்றைய தினம் விவாதத்தின்போது சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வினாவிற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால் அதேநேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அது எங்கே அமையவிருக்கிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள், எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார். அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்திற்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.

மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமையப் பெற்றிருக்கின்றனவோ, இன்னும் சில தினங்களில் நம்முடைய கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் அதுவும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும். ஆனால் வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டு விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT