Skip to main content

வேலுமணியின் 3 ஆயிரம் கோடி ஊழலை பட்டியலிட்டு...: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Published on 05/06/2020 | Edited on 05/06/2020
mks



முதலமைச்சருக்கு வேண்டிய கப்பத்தைக் கட்டிவிடுகிறோம் என்ற ஆணவத்தில் ஆட்டம் போடும் அமைச்சர் வேலுமணியின் ஊழல்களை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இதே போக்கு தொடருமானால், வேலுமணியின் 3 ஆயிரம் கோடி ஊழலை பட்டியலிட்டு மாபெரும் போராட்டத்தைக் கோவையில் நடத்துவோம் என எச்சரிக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் துறை அமைச்சராக மட்டுமல்லாமல் தன்னை 'சூப்பர் முதலமைச்சரைப்' போல நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர் 'ஊழல் மணியான' அமைச்சர் வேலுமணி. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த உடனேயே சிறைக்குப் போவதற்கான அனைத்துக் காரியங்களையும் நித்தமும் செய்து வரும் அமைச்சர்கள் வரிசையில் முதலாவது இடம் அவருக்குத்தான்.

கொள்ளை, இலஞ்சம், முறைகேடுகள் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் தன்னை அரசியல்ரீதியாக விமர்சிப்பவர்களைப் பழிவாங்குவதிலும் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல்கள் செய்வதிலும் கைதேர்ந்தவராக இருப்பவர் அமைச்சர் வேலுமணி.

 

தன்னை எதிர்த்து எழுதிய காரணத்தால் பத்திரிகையாளர்களைக் கைது செய்து கோவையில் சிறையில் அடைத்தார் அமைச்சர் வேலுமணி. கரோனா காலத்திலும் தனது கொள்ளைகளை நிறுத்தாமல் தொடரும் வேலுமணியின் வேலைகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை மாவட்ட செயல்வீரர்கள் தொடர்ந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்கள். இதற்கு முறையாகப் பதில் சொல்ல வக்கற்ற வேலுமணி, தனது கையில் அதிகாரம் இருப்பதால் தி.மு.க.,வினரைக் கைது செய்து சிறைச்சாலைகளைத் தனது சதிவலைக்குப் பயன்படுத்தி வருகிறார்.
 

கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், விவசாய அணி அமைப்பாளர் எம்.எஸ்.இராமமூர்த்தி, கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.துரை, கீர்த்தி ஆனந்த், 84-வது வட்ட செயலாளர் என்.ஜி.முருகேசன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சாரமேடு இஸ்மாயில், பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் ஆகியோர் வேலுமணியின் அராஜகங்களை அம்பலப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டும், விடுவிக்கப்பட்டும், மீண்டும் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள்.

மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர்  மு.முத்துசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலுமணி அடையாளம் காட்டுபவர்களை எல்லாம் கைது செய்வதும், வழக்குப்பதிவு செய்வதும் கோவை மாநகரக் காவல்துறையின் ஒரே வேலையாக மாறிவிட்டது. 'சலாம் போடு' என்றால் 'இதோ எண்ணிக்கொள்' என்பது மாதிரியான ஆட்கள் காவல்துறை அதிகாரிகளாக வந்தால் இதுபோன்ற கேவலங்கள்தான் நடக்கும்.
 

“உள்ளாட்சித் துறை அமைச்சரை எதிர்த்து விமர்சிப்பதற்காக, போராடுவதற்காக இனிமேலும் தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டால் - நானே கோவைக்கு வந்து - மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று ஏற்கனவே எச்சரித்துள்ளேன். கொரோனா காலத்தில் போராட்டங்கள் வேண்டாம் என்றால், கோவையில் நடைபெறும் நடவடிக்கைகள் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்துள்ளன.

தன்னைக் கேட்பதற்கு யாருமில்லை என்ற தைரியத்தில் நடமாடி வருகிறார் அமைச்சர் வேலுமணி. முதலமைச்சருக்கு வேண்டிய கப்பத்தை அவர் எதிர்பார்ப்பைவிட அதிகமாகக் கட்டிவிடுகிறோம் என்ற ஆணவத்தில் ஆட்டம் போடுகிறார் அமைச்சர் வேலுமணி. உள்ளாட்சித் துறை மூலமாக அடித்துக் குவித்த 'கரன்சி மலைகளை' மக்கள் அறியமாட்டார்கள் என்ற மமதையில் இருக்கிறார் அமைச்சர் வேலுமணி. இந்தக் கரோனா காலத்திலும் தனது கொள்ளைகளை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அமைச்சர் வேலுமணி. ஆனால் இவை மக்கள் அறியாதது அல்ல!

கரோனா நோய்த் தொற்றால் தலைநகர் சென்னையே பீடிக்கப்பட மிக முக்கியமான காரணம் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கையாலாகாத்தனம். வேலுமணியின் மிக மோசமான நிர்வாகத்தின் அடையாளம்தான் சுமார் 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதும், தினமும் ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதும், 150 உயிர்கள் இறந்ததும்.
 

nakkheeran app



இதைப் பற்றிய வெட்கமோ, கூச்ச உணர்வோ இல்லாமல் கொள்ளையடிப்பதிலும் அதனை அம்பலப்படுத்துபவர்களைக் கைது செய்வதிலும், இந்தச் செய்திகளை வரவிடாமல் தடுப்பதிலும், மீறிச் செய்தி வெளியிடுபவர்களை மிரட்டுவதிலும் வேலுமணியின் மொத்த நேரமும் போய்க்கொண்டு இருக்கிறது. மக்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் ஊழல், வேப்பெண்ணெய் வாங்குவதிலும் ஊழல் என்று ஊழலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருக்கிறார். கரோனா தொடர்ந்தால்தான் இவரது ஊழலும் தொடர முடியும். இத்தகைய மிகமோசமான அமைச்சரைத் தட்டிக் கேட்கும் நிலைமையில் தமிழக முதலமைச்சரும் இல்லை.

எனவேதான் மக்கள் மன்றத்தில் இதனைக் கண்டிக்க திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்தது. ஜூன் 5-ம் தேதி கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டோம்.

கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.இராமச்சந்திரன், கோவை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி ஆகிய மூவரது ஏற்பாட்டில் மிக எழுச்சியுடன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்துள்ளது. கரோனா காலம் என்பதால் தனிமனித இடைவெளிவிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. ஆனாலும் வேலுமணியின் போலீசார், ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களைக் கைது செய்துள்ளார்கள். கோவை மாவட்டம் முழுவதும், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொய் வழக்குப் போட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

இதே போக்கு தொடருமானால், வேலுமணியின் 3 ஆயிரம் கோடி ஊழலைப் பட்டியலிட்டு மாபெரும் போராட்டத்தைக் கோவையில் நடத்துவோம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.