ADVERTISEMENT

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயற்சி – பதட்டமான போலீஸார்

07:17 AM Oct 15, 2019 | kalaimohan

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் வழக்கம் போல் அக்டோபர் 14ந்தேதி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களது கோரிக்கை மனுவை தந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு மனு தர வருபவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள். இவர்கள் அங்குள்ள சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு தந்தும் தங்களது கோரிக்கை தீர்க்கப்படாமலே இருப்பதாலே உயர்அதிகாரிகள் நிறைந்த மனுநீதி நாள் முகாமுக்கு வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இங்கு வந்து மனு தந்தும் தங்களது கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது, மீண்டும் மீண்டும் மனு தந்தும் தங்கள் மனுவின் மீது பாரபட்சம் காட்டுவதால் தீக்குளித்து உயிர் விட முயல்கின்றனர். சிலர் உயிரும் விட்டுள்ளனர். இதனால் மனுநீதி நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையும் பொதுமக்களை சோதனை செய்தே அனுப்புகின்றனர். அதனையும் மீறி சிலர் தீக்குளிக்க முயல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருபெண்மணி, நுழைவாயிலில் ஒரு பெண்மணி என இருவர் தீக்குளிக்க தங்கள் மீது மண்ணெண்ணய் ஊற்றிக்கொள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை அடுத்த பழைய மல்லவாடியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது கணவர் முனுசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு முனுசாமி இறந்துள்ளார்கள். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் வீடுக்கட்டி வாழ்ந்து வருகின்றனர். நீர்நிலையற்ற பகுதிகளில் அரசு பொறம்போக்கு நிலங்களில் வாழ்பவர்களுக்கு பட்டா தரலாம் என அரசாங்கம் சொல்லியதை தொடர்ந்து இவர்களும், தெரிந்தவர்கள் மூலமாக பட்டா வேண்டி மனு செய்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள் தர முடியாது எனச்சொல்லியுள்ளார்கள். பலமுறை மனு தந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தனது மகளுடன் வந்து மண்ணெண்ணய் தன் மீது ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொள்ள முயன்றார். அதற்குள் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலக வாயிலில் பாதுகாப்புக்கு, சோதனை செய்ய போலீஸார் நிற்கும் நிலையில் எப்படி அலுவல வளாகத்துக்குள் சென்று தன் மீது மண்ணெண்ணய் ஊத்திக்கொண்டு தீக்குளிக்க முயன்றார் என போலீஸாரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்ப பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிவிட்டனர். அதன்பின் சோதனையை தீவிரப்படுத்தினர்.

இதேபோல் செங்கம் பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலேயே தீக்குளிக்க முயல, அவரை பாதுகாப்புக்கு நின்றுயிருந்த போலீஸார் மடக்கி பிடித்தனர், அவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT