ADVERTISEMENT

இரண்டு பெண்கள் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ஜெயங்கொண்டம் பகுதி மக்கள் 

02:39 PM Oct 23, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயங்கொண்டம் - மீன்சுருட்டி நெடுஞ்சாலையில் உள்ள பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி. இவர், அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி (29). இவர்களுக்கு ஸ்ரீராம் (5) என்ற மகனும், ஸ்ரீமதி (11) என்ற மகளும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணியின் மனைவி கண்ணகி (40). இவர்களுக்கு விக்னேஷ்வரன் (24) என்ற ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். கண்ணகியும் மலர்விழியும் நெருக்கமான தோழிகள்.

சமீப நாட்களாக பெய்து வரும் பருவ மழையின் காரணமாக காடுகளில் மழைக்காளான்கள் நிறைய பூத்துள்ளன. இந்நிலையில், நேற்று காலை கண்ணகியும், மலர்விழியும் சமையல் செய்வதற்காக அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கலைமணி வயல் பகுதிக்கு சென்று தேடியுள்ளார். மேலும், அவருடன் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் வயலுக்கு சென்று தேடிப்பார்த்தனர்.

அப்போது, தைல மரங்கள் நிறைந்த பகுதியில் மலர்விழி, கண்ணகி ஆகிய இருவரும் மர்ம நபர்களால் வெட்டி படு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இதைக்கண்டு கலைமணி மற்றும் ஊர் மக்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கலைமணி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மலர்விழி, கண்ணகி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

அப்போது, கொலை செய்யப்பட்ட மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் நகைகளை காணவில்லை என்பது தெரியவந்தது. நகைகளுக்காக இரு பெண்களையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் அந்த கோணத்திலும் விசாரித்துவருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. பெண்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி வயல்வெளி பகுதியில் ஓடிய மோப்ப நாய், கழுவந்தோண்டி சாலை பகுதியில் சென்று நின்றது.

அதேபோல், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT