ADVERTISEMENT

ஈமச்சடங்கிற்கு சென்ற இடத்தில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

11:15 AM Jul 01, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது சித்தணி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குமார் (30), இவரது மனைவி சங்கீதா (25). இந்த தம்பதிகளுக்கு ஐந்து வயது தினேஷ்குமார், நான்கு வயது சத்யஸ்ரீ ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சங்கீதாவின் தாயார் பெரியநாயகி சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நேற்று (30.06.2021) சங்கீதா பிறந்த ஊரான ஆசூரில் அவருக்கான 16ஆம் நாள் ஈமச்சடங்கு காரியத்தில் கலந்துகொள்வதற்காக குமார் - சங்கீதா தம்பதி தங்கள் குழந்தைகளுடன் அங்கு சென்றிருந்தனர்.

நேற்று அந்த ஈமச்சடங்கு காரியத்தில் குழந்தைகள் தங்கள் உறவினர்களுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்ததால் குமார் - சங்கீதா தம்பதி ஈமச்சடங்கு பணியில் முழு கவனத்துடன் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் தினேஷ், சத்யஸ்ரீ இரு பிள்ளைகளும் காரியத்திற்கு வருகை தந்திருந்த உறவினர் பிள்ளைகளுடன் சேர்ந்து அதே ஊரில் உள்ள ராமசாமி என்பவர் வயலில் உள்ள கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். குழந்தைகள் அனைவரும் கிணற்றில் இறங்கி குளிக்கும்போது தினேஷ், சத்யஸ்ரீ இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தனர். இதைக்கண்டு மற்ற குழந்தைகள் கத்தி சத்தம் போட்டுள்ளனர்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஓடிச்சென்று கிணற்று தண்ணீரில் மூழ்கிய இரு குழந்தைகளையும் தேடி வெளியே கொண்டுவந்தனர். மயக்க நிலையில் இருந்த தினேஷ், சத்யஸ்ரீ இரு குழந்தைகளையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் குழந்தைகளின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். ஈமச்சடங்கு காரியத்திற்கு வந்த இடத்தில் இரு குழந்தைகள் இறந்த சம்பவம் ஆசூர் கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT