ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு!

08:36 AM Jan 02, 2024 | mathi23

தமிழ்நாடு முழுவதும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், மாணவர்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 13 - 22 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதில், நெல்லை மாவட்டத்தில் 6 - 12 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிட்டிருந்தது. அதன்படி 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஜனவரி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்பு மற்றும் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (02-01-24) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (03-01-24) முதல் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT