ADVERTISEMENT

அலட்சியமாகப் பணிபுரிந்தார் என விடுதிக் காப்பாளர் இடமாற்றம்; எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் சாலை மறியல்

10:13 AM Oct 17, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்யா நகர் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளனர்.

விடுதி மாணவிகளுக்குக் கடந்த மாதம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்புத் துறையில் உள்ள அதிகாரிகள், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி தொடர்பு எண்களையும் கொடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து அதிகாரிகள் கொடுத்த தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு மாணவிகள் சிலர் புகார்களைத் தெரிவித்துள்ளனர். மாணவிகள் கொடுத்த தகவல் மற்றும் புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவிகள் சிலர் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் காப்பகம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் பழனி சத்யா நகரைச் சேர்ந்த கிருபாகரன், ராகுல், பரந்தாமன் மற்றும் 18 வயதான கல்லூரி மாணவன் ஒருவர் உட்பட 4 பேரை பழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் அலட்சியமாகப் பணிபுரிந்ததாகக் கூறி விடுதிக் காப்பாளர் அமுதா மற்றும் விடுதி காவலாளி விஜயா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகம் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட விடுதிக் காப்பாளர் அமுதாவை திரும்ப பணியமர்த்தக் கோரி திண்டுக்கல் மாவட்டம் தாராபுரம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மீண்டும் விடுதிக் காப்பாளர் அமுதாவை பணியமர்த்தக்கோரி ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் கொடுத்த பின்னர் மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT