Skip to main content

பழனியில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது!!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

Fake IAS officer arrested in Palani

 

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் குமார், இவர் எட்டாம் வகுப்புவரை படித்துள்ளார். பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில் வந்த குமார், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு தங்கும் விடுதியில் இலவசமாக தங்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். அப்போது தங்கும் விடுதியில் இருந்த மேலாளர் அடையாள அட்டையைக் கேட்டும், பழனியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரி ஒருவரை பரிந்துரை செய்யவும் கேட்டுள்ளார். அப்போது முன்னுக்குப் பின் முரணாக குமார் பதில் அளித்ததைத் தொடர்ந்து சந்தேகமடைந்த கோயில் ஊழியர்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

போலீசார் வருவதை அறிந்த குமார் காரை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். துரத்திச் சென்ற கோயில் ஊழியர்கள், குமாரை பிடித்துவந்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறையில் வசித்துவரும்  குமார், காரில் சைரன், தமிழ்நாடு அரசு என்று பதாகையை மாட்டிக்கொண்டு வலம்வந்ததும், பல இடங்களில் தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்லி சலுகைகளைப் பெற்று அனுபவித்ததும் தெரியவந்துள்ளது.

 

கடைசியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற குமார், ஐஏஎஸ் அதிகாரி என கூறி  சிறப்பு தரிசனம் செய்துவிட்டு பழனிக்கு காரில் வந்ததும், ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி சலுகைகளைப் பெற முயற்சி செய்தபோது பிடிபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், எலக்ட்ரிக்கல் வேலை செய்யும் குமார், இரண்டு வருடங்களாக இந்தக் காரைப் பயன்படுத்தி பல இடங்களுக்குச் சென்றுவந்தது தெரியவந்துள்ளது. குமார் மீது அரசு முத்திரையைத் தவறாக பயன்படுத்தியது, அரச முத்திரையைப் பயன்படுத்தி ஏமாற்றியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்த பழனி அடிவாரம் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பழனி மலை அடிவாரத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்