ADVERTISEMENT

ரயில்வே தொழிலாளர் சங்கங்களின் போஸ்டர் அத்துமீறல்?

08:41 PM Feb 25, 2019 | cnramki

ADVERTISEMENT

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் எங்கு பார்த்தாலும் தொழிலாளர் சங்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம். சங்க தேர்தல் போஸ்டரிலிருந்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வரை ரயில் நிலைய சுவர்களை ஆக்கிரமித்து ஒட்டியிருப்பார்கள்.

ADVERTISEMENT

சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (SRMU), தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (DREU), சதர்ன் ரயில்வே எம்ப்ளாயீஸ் சங் (SRES) என, ரயில்வே தொழிலாளர்களுக்கென்று சங்கங்கள் உள்ளன. அனுமதி பெறாத சங்கங்களும் உண்டு. இச்சங்கங்கள்தான், மேற்கூறியவாறு போஸ்டர்கள் ஒட்டுகின்றன. இதுவே விதிமீறல் என்றால், ரயில் பெட்டிகளிலும் போஸ்டர்கள் ஒட்டுவதை என்னவென்று சொல்வது?

அகில இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இருக்கிறது எஸ்ஆர்எம்யு. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா என, இதில் 85 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ரயில்வே துறையில் எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதனாலோ என்னவோ, ரயில் பெட்டிகளிலும் அசராமல் போஸ்டர் ஒட்டுகின்றனர்.

இதுகுறித்து ரயில் நிலைய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "தொழிலாளர் சங்கத்தினருக்கு அறிவிப்பு செய்வதற்கென்று தனியாக இடம் ஒதுக்கி, அறிவிப்பு பலகை வைத்துக்கொள்வதற்கும் அனுமதிக்கிறது ரயில்வே. ஆனாலும், இச்சங்கத்தினர், ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளிலும், தங்கள் இஷ்டத்துக்கு எங்கு பார்த்தாலும் போஸ்டர் ஒட்டுகின்றனர். வெளிநபர்கள் யாரும் இதுபோல் போஸ்டர் ஒட்டினால் ரயில்வே போலீசார் விட்டு வைக்க மாட்டார்கள். வழக்கு போட்டு, ரயில்வே கோர்ட்டில் அபராதம் கட்ட வைப்பார்கள். சங்கத்தினரின் அத்துமீறலையோ யாரும் கண்டுகொள்வதில்லை." என்றார்.

செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு ரயிலேறிய பயணி ஒருவர் ரயில் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரைப் பார்த்து, “இந்த ரயில் யார் வீட்டுச் சொத்து?” என்று கேட்டார்.

மக்களின் பொதுச் சொத்தான ரயில்வே துறையை யார்யாரோ சொந்தம் கொண்டாடி, அவரவர் இஷ்டத்துக்கு ஆட்டம் போடுவது உறுத்தலாக அல்லவா இருக்கிறது?


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT